Published : 20 May 2017 10:29 AM
Last Updated : 20 May 2017 10:29 AM
வெப்பம், காற்று, புயல், மழை போன்ற தட்பவெப்ப நிலை குறித்து அனைத்து விவசாயிகளுக்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்புவதற்காக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 62 லட்சம் விவசாயிகளின் பெயர், அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைத் தீவிரமாக சேகரித்து வருகிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
8 லட்சம் விவசாயிகளுக்கு...
அனைத்து பருவகாலத்திலும் நிலவும் தட்பவெப்ப நிலை குறித்துபொதுமக்களுக்கு தகவல் தெரிவிப்பதில் சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கியப் பங்குவகிக்கிறது. பத்திரிகை, அகில இந்திய வானொலி, தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்கள் மூலம் நீண்ட காலமாக வானிலை நிலவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், விவசாயிகளுக்கும் வானிலை குறித்த தகவல்களைக் குறுஞ்செய்தியாக அனுப்பி சாகுபடிக்கு உதவி வருகிறது வானிலை ஆய்வு மையம். தற்போது 8 லட்சம் விவசாயிகளுக்கு குறுஞ்செய்தி மூலம் தட்பவெப்ப நிலை குறித்த தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் வானிலை நிலவரம் குறித்த செய்தி அனுப்பப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் 34 மாவட்டங்களில் உள்ள 70 லட்சம் விவசாயிகளில் 8 லட்சம் பேர் போக, மீதமுள்ள 62 லட்சம் விவசாயிகளுக்கும் குறுஞ்செய்தி மூலம் தட்பவெப்ப நிலை குறித்த தகவல் அனுப்புவதற்காக அவர்களின் பெயர், ஊர், அலைபேசி எண், எந்த வட்டாரம், சாகுபடி செய்யும் பயிர் உள்ளிட்ட விவரங்களைத் தமிழ்நாடு அரசு விவசாயத் துறையிடம் இருந்து சென்னை வானிலை ஆய்வு மையம் தீவிரமாக சேகரித்து வருகிறது.
“விவசாயத் துறையின் தகவல்தொகுப்பில் இருந்து முழு தகவல்களையும் பெற்ற பிறகு அவை வானிலை ஆய்வு மைய தகவல்தொகுப்பில் பதிவு செய்யப்படும். இப்பணி முடிந்ததும் அனைத்துவிவசாயிகளுக்கும் வானிலைகுறித்த செய்திகள் குறுஞ்செய்தி களாக உடனுக்குடன் அனுப்பப்படும்” என்று சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறினார்.
அதிகபட்ச வெப்பநிலை, குறைந்தபட்ச வெப்பநிலை, காற்றின் திசை, வேகம், காலை, மாலை வேளைகளில் காற்றின் ஈரப்பதம், மழை, கனமழை எச்சரிக்கை, சூறைக்காற்று போன்ற தகவல்களை வானிலை ஆய்வு மையம் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும்.
விவசாயிகளுக்கு அறிவுரைஅதன் அடிப்படையில், பயிர் பூப்பூக்கும் பருவம், விளைச்சல் காலம், அறுவடைக்கு தயார் நிலை என்ற பல்வேறு நிலைகளில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரிய அறிவுரைகளை விவசாயத் துறை அதிகாரிகள் வழங்குவார்கள்.
கனமழை வருவதற்கு வாய்ப்பிருந்தால் வயலில் தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டாம் என்பது போன்ற தகவல்கள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். அதுபோல எந்தப் பருவத்தில் பூச்சி மருந்து தெளிக்க வேண்டும், உரம் போட வேண்டும் என்றெல்லாம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுவதுடன், ஆடு,
மாடு, கோழி போன்ற கால்நடைகளைப் பாதுகாப்பாக வளர்ப்பது குறித்தும் தகவல் தெரிவிக்கப்படும். தட்பவெப்ப நிலை தகவல்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்கிறது வானிலை ஆய்வு மையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT