Published : 04 May 2017 12:26 PM
Last Updated : 04 May 2017 12:26 PM
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழகம் அதிக தயக்கம் காட்டுவது ஏன் என உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ராமச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், "இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) நீட் தேர்வை பரிந்துரைத்து வெளியிட்ட அறிவிப்பாணையின் பிரிவு 5-ல் நீட் தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருப்பின், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர அதிக வாய்ப்புக் கிடைக்கும். எனவே, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு ஆணையில் மாற்றம் செய்து பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணையும் பரிசீலைனை செய்யும் வகையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு இன்று (வியாழக்கிழமை) உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, "மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழகம் அதிக தயக்கம் காட்டுவது ஏன். தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்றால் வலுவான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டும்தானே. தமிழகத்தில் தரமான ஆசிரியர் பயிற்சி மையங்கள் அதிகமாக இல்லை. இதனால், தரமான ஆசிரியர்களும் உருவாவதில்லை. ஆசிரியர்கள் தரம் உயர்ந்தால்தானே தரமான மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்" என்று கருத்து தெரிவித்தார்.
இந்திய மருத்துவக் கவுன்சில் தரப்பில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் ஆஜராகததால், இந்த வழக்கில் நீதிபதி உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT