Last Updated : 06 May, 2017 09:02 AM

 

Published : 06 May 2017 09:02 AM
Last Updated : 06 May 2017 09:02 AM

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக நீட்டிப்பு: நிவாரணத்தை உயர்த்தி வழங்க மீனவர்கள் கோரிக்கை

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் 45 நாட்களிலிருந்து 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளதால் அதற்கேற்ப நிவாரணத் தொகையையும் உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வங்கக் கடலில் மீன்கள் இனப் பெருக்கம் செய்வதற்காக ஆண்டு தோறும் தமிழக கடலோர மாவட்டங் களில் 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது.

நடப்பாண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. இதனால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் செல்லாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த தடைக்காலத்தில் வலைகளை சீரமைப்பது, விசைப்படகுகளை பழுது பார்ப்பது, பெயின்ட் அடிப்பது உள் ளிட்ட பணிகளை மீனவர்கள் மேற் கொண்டு வருகின்றனர். இதுபோன்ற நேரத்தில் மீனவர்களின் வாழ்வா தாரம் பாதிக்கும் என்பதால் அவர்களுக் கான நிவாரணத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண மாக தமிழக அரசு வழங்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் நடப் பாண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களாக நீட்டிக்கப்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக் குமார் நேற்று அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்புக்கு மீனவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிவாரணம் கிடைப்பதில்லை

இது தொடர்பாக காசிமேடு மீனவர் கள் எஸ்.பாலமுருகன், சங்கர் ஆகி யோர் கூறும்போது, “ஒவ்வோர் ஆண் டும் மீன்பிடி தடைக்காலத்தில் நிவாரண தொகையை அரசு ஒதுக் கினாலும், தடைக்காலம் முடியும் தருவாயில்தான் மீனவர்கள் கைகளில் நிவாரணம் கிடைக்கிறது.

மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர் கள் தொழிலுக்கு செல்வதில்லை என்பதால்தான் அரசு நிவாரணம் அறிவிக்கிறது. அப்படியிருக்க அந்த தொகையை தடைக்காலம் முடிந்து வழங்கினால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை.

ஏற்கெனவே, வார்தா புயல் மற்றும் எண்ணெய் கசிவால் வருவாய் இழப்பை சந்தித்த நாங்கள் அதன் தொடர்ச்சியாக மீன்பிடி தடைக் காலத்தாலும் வருவாயை இழந் துள்ளோம்.

வார்தா புயல் மற்றும் எண் ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட மீனவர் களுக்கு வந்து சேர வேண்டிய நிவாரணமும் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. தற்போது தடைக் காலமும் 61 நாட்களாக நீட்டிக்கப்பட் டுள்ளது. எனவே, விலைவாசி உயர்வு, குழந்தைகளின் கல்விச் செலவு போன்ற வற்றை கருத்தில் கொண்டு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்கவும், உரிய காலத்தில் நிவாரணம் கிடைக் கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இந்திய மீனவர்கள் சங்கத்தின் தலை வர் எம்.டி.தயாளன், “தமிழக அரசின் அறிவிப்பை நாங்கள் ஏற்றுக்கொள் கிறோம். ஆனால், கால நீட்டிப்புக்கு ஏற்ப நிவாரணத்தையும் அரசு உயர்த்தி வழங்கவும், குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்றுக்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி தடையால் மட்டுமே மீன்வளம் பெருகாது. அந்த தடைக்காலத்தின் பயன் முழுமையடைய கம்பெனி களின் கழிவுகள் கடலில் கலப் பதை தடுக்க வேண்டும். மேலும், மழைக்காலத்துக்கு முன்பு முகத் துவாரங்களை அரசு தூர்வார வேண்டும். மீன்வளத்தைப் பெருக்க அரசு மீன் பண்ணைகள் மூலம் மீன் குஞ்சுகளை கடலில் விடவும், கடற்கரையோரம் 2 கி.மீ தூரத்துக்கு செயற்கை பவள பாறைகளை அரசு உருவாக்க வேண்டும்” என்றார்.

விரைவில் நிவாரணம்

மீன்பிடி தடைக்கால நிவாரணம் எப்போது வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக் குமாரிடம் கேட்டதற்கு, “மீனவர் களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x