Published : 23 Feb 2023 11:08 PM
Last Updated : 23 Feb 2023 11:08 PM

மீனவர் பிரச்சினை: தூதரக வழிமுறைகள் மூலம் உறுதியான நடவடிக்கை எடுத்திட மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று (23.02.2023) நடத்திய தாக்குதல் சம்பவத்தை மிகுந்த வேதனையுடன் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். இத்தாக்குதல் நமது மீனவர்கள் மீது இலங்கை நாட்டினர் 15.02.2023 அன்று நடத்திய சில நாட்களுக்குள் நிகழ்ந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21.02.2023 அன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதாகவும், பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இன்று (23.02.2023) அதிகாலை 4.30 மணியளவில் இலங்கைக் கடற்படையினர் அவர்களை இரும்பு கயிறுகளைக் கொண்டு தாக்கியதாகவும் அவர்களின் மீன்பிடி உபகரணங்கள், இரண்டு பேட்டரிகள், என்ஜின் மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை எடுத்துச் சென்றுவிட்டனர் என்றும், இத்தாக்குதலில் காயமடைந்த ஐந்து மீனவர்கள் தரங்கம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல், அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகவும், பாக் வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கைக் கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்கு கடுமையான காயங்களையும், பொருளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துவதையும் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன், கண்டனத்திற்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

நமது மீனவர்கள் தமது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிப்பதை மட்டுமே நம்பியுள்ளனர் என்றும், மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடத்தப்படுவது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தை இலங்கை அரசிடம் வலுவாக எடுத்துச் சென்று, நமது இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க உயர்மட்ட அளவில் உறுதியான மற்றும் ஒருங்கிணைந்த தூதரக வழிமுறைகள் வாயிலாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x