Published : 25 May 2017 09:58 AM
Last Updated : 25 May 2017 09:58 AM
உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக விடுமுறை கால நீதிமன்றத்தில் இரு நாட்களில் 782 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை விசாரணை பட்டியலில் சேர்க்க ஊழியர்கள் நள்ளிரவு வரை பணிபுரிந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே மாதம் இறுதிவரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையில் ஒவ்வொரு வாரமும் இரு நாள் (புதன், வியாழன்) விடுமுறை கால நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. விடுமுறைக் கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு கொண்டுவர வேண்டிய வழக்குகளை அந்தந்த வாரத்தின் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தாக்கல் செய்ய வேண்டும்.
பொதுவாக விடுமுறைக் கால நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இதனால் ஒவ்வொரு முறையும் அமர்வு மற்றும் தனி விசாரணை சேர்ந்து 100 முதல் 150 வழக்குகள் தாக்கலாகும். பல முறை மொத்த வழக்குகளும் ஒரே நாளில் விசாரித்து முடிக்கப்பட்ட நிகழ்வும் உள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூன்றாவது, நான்காவது வார விடுமுறை கால நீதிமன்றத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.
782 ரிட் மனுக்கள்
கடந்த வாரம் நடைபெற்ற 3-வது வார விடுமுறைக் கால நீதிமன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட ஜாமீன், முன்ஜாமீன் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதைவிட கூடுதலாக 4-வது வார விடுமுறை கால நீதிமன்றத்தில் இந்த வார திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 782 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் 455 மனுக்கள் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. இதில் நீதிபதி எம்.வி.முரளிதரன் மேற்கொண்ட விசாரணையில் நீட் தேர்வுக்கு தடை விதித்தது உட்பட 232 ரிட் மனுக்கள் மீது உத்தரவு பிறப்பித்தார். மீதமுள்ள மனுக்கள் இன்றைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே இன்றைய விசாரணை பட்டியலில் 317 மனுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஊழியர்களின் கடமையுணர்வு
விடுமுறை கால நீதிமன்றத்தில் அதிகளவில் வழக்குகள் தாக்கலானதால் ஊழியர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. கோடை விடுமுறையின்போது நீதிமன்ற ஊழியர்களுக்கு ஆவணங்களை சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒதுக்கப்படுகிறது. கோடை விடுமுறையில் வழக்குகள் தாக்கலாவது குறைவாக இருக்கும் என்பதால் ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிரமமின்றி முடித்து வந்தனர்.
சாதாரண நாட்களில் தாக்கலாகும் மனுக்களுக்கு வழக்கு எண் வழங்கப்பட்டு விசாரணை பட்டியலில் சேர்க்கும் பணியை இரவு 7.30 மணிக்குள் முடித்துவிடுவார்கள். ஆனால், கடந்த இரு வாரமாக சாதாரண நாட்களில் தாக்கலாகும் எண்ணிக்கையை காட்டிலும் பல மடங்கு அதிகமாக குவிந்த மனுக்களால் ஊழியர்கள் இரவு 12 மணி வரை வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மனுக்களை பெறுவது, வழக்கு எண் வழங்குவது, மறுநாள் விசாரணைப் பட்டியலில் சேர்ப்பது என ஊழியர்களின் பணி நள்ளிரவு வரை நீடித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT