Published : 25 Jul 2014 11:53 AM
Last Updated : 25 Jul 2014 11:53 AM

தமிழகத்தில் ரூ.2,325 கோடி செலவில் சாலை உள்கட்டமைப்பு வசதிகள்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் ரூ.2,325 கோடி செலவில் சாலைகள், சுரங்கப்பாதைகள் மற்றும் பாலங்கள் அமைக்கப்படும், அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 100 ஆற்றுப் பாலங்கள் கட்டப்படும், என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேரவையில் விதி எண் 110-ன் கீழ் இன்று அவர் வாசித்த அறிக்கையில்: "சாலை உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு முழுவதும் மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, 2,325 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலைகள், பாலங்கள், சுரங்கப் பாதைகள் அமைக்கும் திட்டங்களை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. புதிதாக விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலைத் துறையின் 250 கிலோ மீட்டர் சாலைகளில் விளிம்பு வரை அகலப்படுத்தும் பணிகள், வடிகால் வசதியுடன் கூடிய நடைபாதைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு மொத்தம் 1,033 கோடி ரூபாய் செலவு ஏற்படும். முதற்கட்டமாக, இந்த ஆண்டு 250 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும்.

2. சென்னை பெருநகரில் பெருகி வரும் போக்குவரத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, 185 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மேடவாக்கம் மற்றும் கீழ்க்கட்டளையில் இரண்டு பல்வழிச்சாலை மேம்பாலங்களும்; 50 கோடி ரூபாய் மதிப்பில் தெற்கு உள் வட்ட சாலையில் வாகன சுரங்கப் பாதையும் ஜப்பான் பன்னாட்டு ஒருங்கிணைப்பு முகமையின் நிதியுதவியுடன் கட்டப்படும்.

3. 58 கோடி ரூபாய் மதிப்பில், பருத்திப்பட்டு, ராமாவரம் மற்றும் நொளம்பூர் அருகே மூன்று உயர்மட்ட பாலங்களும்; 12 கோடி ரூபாய் மதிப்பில் தாம்பரம் ரயில்வே நிலையத்திற்கு அருகில் நகரும் படிகட்டுகளுடன் கூடிய ஒரு நடை மேம்பாலமும் அமைக்கப்படும்.

4. ஒரகடம் தொழிற்பூங்கா பகுதியில் சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சிங்கப்பெருமாள் கோயில் - திருப்பெரும்புதுhர் மாநில நெடுஞ்சாலையில், ஒரகடம் முதல் திருப்பெரும்புதூர் வரை ஆறு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சிங்கபெருமாள் கோயில் முதல் ஒரகடம் வரை ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் 120 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

5. மதுரை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைக்கும் வகையில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை முதல் கப்பலூர் வரை 27 கிலோ மீட்டர் நீள மதுரை வட்டச் சாலையை நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணி 200 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

6. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சேலம் மாநகர் ஐந்து சாலைகள் சந்திப்பு அருகே உயர்மட்ட பாலம் கட்டப்படும். இப்பணிக்காக நடப்பாண்டில் 275 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

7. பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, ராமநாதபுரம் மாவட்டத்தில் 35 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலையும், விருதுநகர் மாவட்டத்தில் 15.6 கிலோ மீட்டர் நீள மாநில நெடுஞ்சாலையும் 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாடு செய்யப்படும்.

8. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் நகரை சுற்றியுள்ள சாலைகளில் மழைக்காலங்களில், நீர் தேங்குவதை தவிர்க்கும் பொருட்டு 33 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலைகள் உயர்த்தி அமைக்கப்படும்.

9. நாமக்கல் - திருச்செங்கோடு சாலை 140 கோடி ரூபாய் செலவில் நான்கு வழித் தடமாக மாற்றி அமைக்கப்படும்.

10. பாதசாரிகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய, அரக்கோணம் சுரங்கப்பாதை அருகே 66 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டப்படும்.

11. கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, கொள்ளிடம் ஆற்றின் இடது புற கரை சாலை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்திரம்பூர் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாணியாற்றின் குறுக்கே என 4 உயர்மட்ட பாலங்கள் 60 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.

12. இதே போல், சேலம் நகரத்தில் திருவாக் கவுண்டனூர் சந்திப்பில் ஒரு பல் வழிச் சாலை மேம்பாலம் 50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.

13. மேலும், கோயம்புத்தூர் நகரத்தில் நஞ்சுண்டாபுரம் சந்திப்பு மற்றும் ரயில் நிலையம் சந்திப்பில் இரண்டு நகரும் படிக்கட்டுடன் கூடிய நடை மேம்பாலங்களும்; கரூர் நகரத்தில் பேருந்து நிலையம் அருகே ஒரு நடை மேம்பாலமும் 24 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

14. நகரங்களில் விபத்தை தடுக்கும் வண்ணம், அனைத்து சாலை பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல், வடிவியல் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல், குறுகிய பாலங்களை அகலப்படுத்துதல், திறந்த கிணறுகளில் விபத்து தடுப்பான்கள், மைய தடுப்பான்கள் அமைத்தல், சாலை சமிக்ஞைகள் அமைத்தல் போன்றவற்றிற்காக 1,130 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் கண்டறியப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 400 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடப்பாண்டு மேற்கொள்ளப்படும்.

15. நபார்டு வங்கி கடனுதவியுடன், அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 300 கோடி ரூபாய் மதிப்பில் 100 ஆற்றுப் பாலங்கள் கட்டப்படும்.

16. இவை தவிர, சாலைகளின் மேலாண்மை மற்றும் பராமரிப்பு பணிகளை திறன்பட செயல்படுத்தும் வகையில், ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை 5 ஆண்டுகளுக்கு மேம்படுத்தி, ஒருங்கிணைத்து பராமரிக்க 1,020 கோடி ரூபாய் மதிப்பில் பராமரிப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

தமிழக அரசின் நடவடிக்கைகள், அனைத்துத் தரப்பு மக்களின் போக்குவரத்து வசதியை மேலும் மேம்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்லவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x