Published : 22 Jul 2014 01:06 PM
Last Updated : 22 Jul 2014 01:06 PM
தருமபுரி அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவரும் இளம்பெண்ணிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. சில புகைப்படங்களை வெளியிடுவேன் என கூறி காதலர் மிரட்டியதால் அந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
தருமபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணாபுரம் போலீஸார் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த இளம்பெண் கடந்த 2011-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள கல்லூரியில் டெக்ஸ்டைல் டிப்ளமோ படித்துள்ளார். அப்போது அவரது வகுப்புத் தோழரான மதுரையைச் சேர்ந்த இளைஞரை காதலித்துள்ளார். இருவரும் எல்லை மீறிய சூழலில் இளம்பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.
இதையறிந்த அந்த இளைஞர் காதல் விவகாரத்தை பெற்றோருக்கு படிப்படியாக தெரிவித்து திருமணம் செய்து கொள்வதாகவும், அதனால் கருவை கலைத்து விடும்படியும் கோரியுள்ளார். அதையேற்று தருமபுரி தனியார் மருத்துவமனை ஒன்றில் அந்த இளம்பெண் கருவை கலைத்துள்ளார். அதன்பிறகு திருமணம் செய்யும்படி அந்த இளம்பெண் வலியுறுத்தியபோது அவரது காதலர் அலட்சியமாக பேசியுள்ளார்.
இதை அந்த இளம்பெண் கண்டித்தபோது, “இருவரும் தனிமையில் இருந்த படங்களை இணையத்தில் பதிவேற்றுவேன். அதற்குமுன்பு சில படங்களை அனுப்புகிறேன்” என்று கூறி வாட்ஸ்அப் மூலம் இளம்பெண்ணின் செல்போனுக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும், தன் நண்பர் ஒருவருடன் இணைந்து அந்த இளம்பெண்ணுக்கு செல்போனில் மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்தத் தகவல்களை அறிந்த போலீஸார் இளம்பெண்ணின் காதலரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT