Published : 23 Feb 2023 07:38 PM
Last Updated : 23 Feb 2023 07:38 PM

பிரதமரை விமர்சித்தால் காவல் துறையை ஏவிவிடும் பாஜகவினர்: கே.பாலகிருஷ்ணன் காட்டம்

கே.பாலகிருஷ்ணன் | கோப்புப்படம்

சென்னை: "சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல என்றால் பதில் கருத்து சொல்லலாம். அதேசமயம், அது மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும், ரவுடித்தனமாகவும் மாறுவதை அனுமதிக்கவே கூடாது. இந்நிலையில், பிரதமரை விமர்சித்தால் காவல் துறையை ஏவிவிடுவோம் என்பது பாஜகவின் சகிப்பற்ற தன்மையையும், அதிகார மமதையையும் காட்டுகிறது" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேற்று ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக சக பயணியர் ஒருவரை பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி “தூக்கிவிடுவேன், நான் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர்” என்றெல்லாம் தொடர்ச்சியாக மிரட்டியிருக்கிறார். இதை சகித்துக் கொள்ள முடியாமல் சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், நாராயணன் திருப்பதியை தட்டிக்கேட்டுள்ளார்.

ஆனால், தன் தவறை உணர்ந்து திருத்திக் கொள்வதற்கு பதிலாக ஆளும் கட்சி என்ற அதிகாரத்தையும், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற பொறுப்பையும் தவறாக பயன்படுத்தி காவல்துறையை ஏவிவிட்டு கே. சாமுவேல்ராஜை ரயில்வே போலீசார் ரயிலில் இருந்து இறக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள். பாஜகவுக்கு அஞ்சி ரயில்வே போலீஸ் நடந்து கொண்ட விதம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

பொது வாழ்க்கையில் இருக்கிற யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. கருத்து சுதந்திரம், அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள உரிமையாகும். சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல என்றால் பதில் கருத்து சொல்லலாம். அதேசமயம், அது மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும், ரவுடித்தனமாகவும் மாறுவதை அனுமதிக்கவே கூடாது. இந்நிலையில், பிரதமரை விமர்சித்தால் காவல்துறையை ஏவிவிடுவோம் என்பது பாஜகவின் சகிப்பற்ற தன்மையையும், அதிகார மமதையையும் காட்டுகிறது.

இத்தனையும் செய்துவிட்டு கே.சாமுவேல்ராஜ் பேசியதை வெட்டியும், திரித்தும் வெளியிட்டு அவர் குற்றம் செய்து விட்டதைப் போல பொதுவெளியில் பதிவிடுவதை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. தென்னக ரயில்வே காவல் துறை, இச்சம்பவத்தில் அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறையினர் மீதும், சக பயணிகளை மிரட்டிய பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x