Published : 23 Feb 2023 06:18 AM
Last Updated : 23 Feb 2023 06:18 AM
திருநெல்வேலி: ராதாபுரத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உவரி, இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்பனை, பெருமணல், கூடுதாழை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள மீனவர்கள் நலனுக்காக ராதாபுரத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உதவி இயக்குநர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக கட்டிடம் பழமையானது என்பதால் ஆங்காங்கே சேதமடைந்திருந்தது. புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து அரசு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1.60 கோடி ஒதுக்கியது. இந்த நிதியில் ராதாபுரம் தாலுகா அலுவலக பிரதான சாலையில் புதிய கட்டிடம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி நிறைவடைந்தது.
ஆனால் அலுவலகம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த புதிய கட்டிடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT