Published : 23 Feb 2023 02:51 PM
Last Updated : 23 Feb 2023 02:51 PM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் வரும் மார்ச் 13ல் முழு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். சரியாக பணியாற்றாத உள்ளூர் அதிகாரிகளுக்கு பேரவையில் தண்டனை வழங்கப்படும் என புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் வழக்கமாக மார்ச் மாதம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். கடந்த 12 ஆண்டுகளாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த நிதியாண்டில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
கடந்த மாதம் துணை நிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் திட்டக்குழு கூடி 2023-24ம் ஆண்டுக்கு பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை நிர்ணயம் செய்தது. இதற்கான அனுமதிகோரி கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டப் பேரவைத் தலைவர் செல்வம் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 9 ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் துணை நிலை ஆளுநர் தமிழிசை உரையாற்றுகிறார். தொடர்ந்து 2 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது. மார்ச் 13ம் தேதி காலை 9.45 மணிக்கு நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்" என பேரவைத் தலைவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பேரவைத் தலைவர், "புதுச்சேரியில் 10 சதவீத அரசு அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தராதது நீடிக்கிறது. உண்மையில் திட்டங்களைக் கெடுப்பது புதுச்சேரியுள்ள சில உள்ளூர் பிசிஎஸ் அதிகாரிகள்தான்.
அவர்கள்தான் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பும் திட்டக் கோப்புகளில் எதிர்மறையான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர்.
முக்கியமான 3 துறைகளில் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே செலவிட்டுள்ளனர். சிறப்பு கூறு நிதியையும் சரியாக செலவிடவில்லை. சரியாக பணியாற்றாத அதிகாரிகளுக்கு இம்முறை கூடும் சட்டப்பேரவையில் தண்டனை தரப்படும்" என பேரவைத் தலைவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT