Published : 23 Feb 2023 04:13 AM
Last Updated : 23 Feb 2023 04:13 AM
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவது, பொதுமக்களை ஒரு இடத்தில் தங்க வைப்பது என பல்வேறு விதிமீறல்கள் நடப்பதாக புகார்கள் குவிந்து வரும் சூழலில், இதுதொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். இன்றும் அவர்கள் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். இதனால், திட்டமிட்டபடி இடைத்தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக தேர்தல் ஆணையத்திலும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோரிடமும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, வாக்காளர்களுக்கு ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் என பணம் மற்றும் குக்கர் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களை கொட்டகையில் அடைத்து வைத்து, தினமும் ரூ.500 முதல் ரூ.1,000 வரை பண விநியோகம் நடைபெறுவதாகவும், அசைவ விருந்து வழங்குதல் உள்ளிட்ட விதிமீறல்கள் நடப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, தேமுதிக சார்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அருந்ததியர் சமூகத்தினரை தவறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி வேட்பாளருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வீடியோ ஆதாரங்களுடன் புகார்: வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக வீடியோ ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்துக்கு 100-க்கும் மேற்பட்ட புகார்கள் சென்றுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் அஜய் பாதா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசி மோகன், தேர்தல் பார்வையாளர்களான கவுதம் குமார் (செலவினம்), ராஜ்குமார் யாதவ் (பொது), சுரேஷ்குமார் சடிவே(காவல் துறை) ஆகியோரும் காணாலி வாயிலாக பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நேர்மையாக, சுதந்திரமாக நடத்தி முடிக்க தேவையான ஆலோசனைகளை தேர்தல் துணை ஆணையர் அஜய் பாதா வழங்கியுள்ளார். பணப் பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் குறித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தேர்தல் முன்னேற்பாடுகள், முறைகேடு தொடர்பான புகார்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையர்கள் இன்றும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். புகார்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதால், திட்டமிட்டபடி இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையே, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடா தொடர்பாக அரசியல் கட்சிகள், அமைப்புகள், வேட்பாளர்கள், தனி நபர்கள் என இதுவரை 100-க்கும் மேற்பட்டோரிடம் இருந்து இங்கு புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களை, தேர்தல் ஆணையத்துக்கும், மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ளோம்.
எனக்கு வந்த புகார்கள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்த விளக்கங்களை பெற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இதுதவிர, இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக புகார் கொடுத்துள்ளது. இதுதொடர்பாகவும் தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அந்த விளக்கமும் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT