Published : 22 Feb 2023 10:58 PM
Last Updated : 22 Feb 2023 10:58 PM

அக்கப்போர் செய்வதை விடுத்து தனக்கான வேலையை ஆளுநர் எப்போது செய்வார்? - திமுக காட்டம்

சென்னை: "ஆளுநர் மாளிகையை 'காபி ஷாப்' போல மாற்றிக் கொண்டு, வேலைவெட்டி இல்லாமல் இருப்பவர்களை அழைத்து, சந்திப்புகளை நடத்துவதும் அதனை ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதுமே ஆளுநரின் செயல்பாடாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது" என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி மாநிலத்திற்குப் பொதுவானவராக செயல்படாமல், ஓர் அரசியல் கட்சிப் பிரமுகர் போலவே தொடர்ந்து செயல்பட்டு வருவதை தமிழ்நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல் சட்டத்தின்படி பதவிப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆளுநர், இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு மாறாக, சனாதன தர்மம் என்றெல்லாம் பேசி, ஒரு கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் போலவே செயல்பட்டு வருகிறார். கல்வி நிலையங்களில் நடைபெறும் விழாக்களில் மதரீதியாகப் பேசுவது அவரது வழக்கமாக உள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்றும், தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்றும் ஆளுநர் ரவி, தமிழ்நாடு பெயர் மாற்றத் தியாக வரலாற்றை அறியாமல் உளறிக் கொட்டி, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் கண்டனத்திற்கும் ஆளானார். பொங்கல் நன்னாளில், ‘தமிழ்நாடு வாழ்க’ எனத் தமிழ்நாட்டு மக்கள் கோலமிட்டு ஆளுநருக்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதன்பிறகே, தமிழ்நாடு எனத் திருத்திக் கொண்டார்.

இனி எல்லாவற்றிலும் இந்தத் திருத்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது போல, பல்கலைக்கழக விழா ஒன்றில் நேற்று (பிப். 21) பேசிய ஆளுநர் ரவி, உலக மாமேதை - பொதுவுடைமைக் கருத்தியலின் தந்தை கார்ல் மார்க்ஸ் அவர்களைப் பற்றித் தேவையற்ற கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

சமூக அறிவியலாளரும் பொருளியல் மேதையுமான கார்ல் மார்க்ஸ் தனது நண்பர் ஃப்ரெடரிக் எங்கெல்சுடன் இணைந்து வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை முதன்முதலில் தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். பொதுவுடைமைக் கருத்தியல் வலியுறுத்தும் வர்க்க பேதமற்ற சமத்துவமே திராவிட இயக்கத்தின் இறுதி இலக்கு என்ற லட்சியத்தை மேற்கொண்டவர்கள் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும். அதற்கான வழிமுறையாக, அவர்கள் வகுத்த சமூகநீதி எனும் பாதையைத் தேர்ந்தெடுத்துப் பயணித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

மனிதர்களைப் பிறப்பால், சாதியால், நிறத்தால், பாலினத்தால், பணத்தால் என எந்த வகையிலும் பாகுபடுத்திப் பார்க்காமல், அவரவருக்கான உரிமைகளையும் வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்கிற பரந்த மானுடப் பார்வை கொண்ட பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கியவர் கார்ல் மார்கஸ். பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வருணபேதத்தைப் பாதுகாக்க நினைப்போருக்கு கார்ல் மார்க்ஸ் கொள்கைகள் கசப்பு மருந்துதான். அதை விழுங்க முடியாமல் வாந்தி எடுப்பது போல ஆளுநர் பேசுவது அவர் வகிக்கும் பதவிப் பொறுப்புக்கு அழகல்ல, முறையுமல்ல.

ஆளுநர் மாளிகையை 'காபி ஷாப்' போல மாற்றிக் கொண்டு, வேலைவெட்டி இல்லாமல் இருப்பவர்களை அழைத்து, சந்திப்புகளை நடத்துவதும் அதனை ராஜ்பவன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதுமே ஆளுநரின் செயல்பாடாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.

ஒரு கட்சியின் சார்பில் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கச் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் அளித்த கோரிக்கையை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும் ராஜ்பவன், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் குரலாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவின் நிலை என்ன என்பதை எப்போது வெளியிடப் போகிறது? கிடப்பில் உள்ள மற்ற மசோதாக்களை பற்றி என்ன சொல்லப் போகிறது?

ஆனால், தேசபக்தியையும் அரசியல் வியாபாரப் பொருளாக்கிவிட்ட பாஜக சார்பில் உள்நோக்கத்துடன் இந்த விவகாரம் ஊடக விளம்பரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் பெயரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, வலிந்து கொண்டு வரப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைக்கும் சூழல் வரும். சட்டம் - ஒழுங்கு சீர்குலையும் நிலைமையை உருவாக்குவோம் எனப் பொது அமைதியைக் குலைக்கும் வகையில் பேச வைக்கப்பட்டுள்ளார்.

இத்தகைய அரசியல் கண்ணோட்டங்களைப் புறந்தள்ளி, சட்ட ரீதியான உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் காவல்துறை மேற்கொண்டு வரும் நிலையில், ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அரசியல் பார்வையுடன் பதிவுகளை இடுவது என்பது உள்நோக்கம் கொண்ட விஷமத்தனமான செயலன்றி வேறில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பதவியினை வசிக்கும் ஆளுநர் ரவி, அந்தப் பொறுப்புக்குரிய மாண்பைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் சிறுபிள்ளை விளையாட்டு ஆடிக் கொண்டிருப்பது அரசியல் சட்டத்தை அவமதிக்கும் செயல். தனக்கான விளம்பரத்திற்காகவும், தன்னைப் பதவியில் நியமிக்க பரிந்துரைத்தவர்களின் விருப்பத்திற்காகவும் உலகத் தலைவர்களையும் தமிழ்நாட்டின் மாண்புகளையும் சிதைக்கும் வகையில் செயல்படுவதையும், அரசியல்வதி போல சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் உடனடியாக நிறுத்திக்கொண்டு, ஆளுநருக்குரிய வேலை என்னவோ அதில் கவனம் செலுத்துவதே, மக்களின் வரிப்பணத்தில் அவர் பெறும் ஊதியத்திற்கு உண்மையானதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x