Published : 22 Feb 2023 07:09 PM
Last Updated : 22 Feb 2023 07:09 PM
சென்னை: வளர்ப்புத் தாய் நரபலி கொடுக்க இருப்பதால், தமிழ்நாட்டுக்கு தப்பி வந்த தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் ஷாலினி சர்மா தாக்கல் செய்த மனுவில், “நான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர். எனது வளர்ப்புத் தாய் சுதா ஷர்மா, மாந்த்ரீகங்களிலும், மூட நம்பிக்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர். என்னை நரபலி கொடுக்க அவர் முடிவு செய்துள்ளார்.
ஏற்கெனவே, எனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் அவர் நரபலி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக போலீசில் புகாரளிக்க யாருக்கும் தைரியமில்லை.
நரபலியில் இருந்து தப்பிப்பதற்காக தட்சிணாமூர்த்தி என்ற நண்பரின் உதவியுடன் பிப்ரவரி 17-ம் தேதி சென்னை வந்தேன். தந்தைப் பெரியார் திராவிடர் கழக செயலாளர் வீட்டில் தங்கியிருக்கும் என்னை, குடும்பத்தினரும், ஏபிவிபி அமைப்பினரும் வலுக்கட்டாயமாக போபால் அழைத்துச் சென்றுவிடுவர். வலுக்கட்டாயமாக என்னை போபாலுக்கு கொண்டு சென்றுவிட்டால் என்னை நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது. தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி சந்திரசேகரன் முன் நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT