Published : 22 Feb 2023 10:06 PM
Last Updated : 22 Feb 2023 10:06 PM
சென்னை: சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் இதுவரை 1.08 கோடி புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 லட்சம் அதிகம் ஆகும்.
சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் கீழ், 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 நகர்ப்புற சுகாதார மையங்கள், 24 மணி நேரமும் செயல்படும் மூன்று மகப்பேறு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு காய்ச்சல் துவங்கி, டெங்கு, மலேரியா, டைபாய்டு, சிக்குன் குனியா உள்ளிட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையில் தனியார் மருத்துவமனைகளை விட, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது. அந்த வகையில், கடந்த 2021 ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2022 மார்ச் 31-ம் தேதி வரை 94 லட்சத்து 35 ஆயிரத்து 865 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். அதேநேரம், 2022 ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை, ஒரு கோடியே எட்டு லட்சத்து 89 ஆயிரத்து 533 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த நிதியாண்டு இன்னும் முடிவடையாததால், மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மண்டல வாரியாக சிகிச்சைபெற்றோர் விபரம்:
மண்டலம் – கடந்த ஆண்டு – இந்த ஆண்டு
திருவொற்றியூர் – 4,35,246 – 5,10,163
மணலி – 1,69,432 – 1,58,202
மாதவரம் – 2,94,548 – 3,90,646
தண்டையார்பேட்டை – 10,87,540 – 10,67,136
ராயபுரம் – 7,94,818 – 9,72,944
திரு.வி.க.நகர் – 8,02,964 – 10,12,253
அம்பத்துார் – 7,45,752 – 7,27,390
அண்ணாநகர் – 7,95,502 – 12,35,245
தேனாம்பேட்டை – 8,99,591 – 11,33,141
வளசரவாக்கம் – 4,72,981 – 4,67,159
ஆலந்துார் – 4,00,910 – 4,03,457
ஆடையாறு – 6,99,800 – 7,69,120
பெருங்குடி – 3,97,525 – 3,75,594
சோழிங்கநல்லுார் – 4,82,320 – 5,28,265
மொத்தம் – 94,35,865 – 1,08,89,533
இதுகுறித்து, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் பொதுமக்கள் கூறுகையில், "தனியார் கிளினிக்குகளுக்கு சென்றால், 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும், மருந்து, மாத்திரைகளுக்கு ஆயிரம் ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், இலவசமாக சிகிச்சையும், மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படுகிறது. அதேநேரம், வாரத்தில் ஓரிரு நாட்களில் மட்டுமே டாக்டர்கள், மருத்துவம் பார்க்கின்றனர்.
முன்பு ஆரம்ப சுகாதார நிலையித்தில் வாரத்திற்கு இரண்டு நாள் மகப்பேறு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. தற்போது வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே இது போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. மேலும் எக்கோ, மகப்பேறு சிகிச்சைகளுக்கான சிறப்பு ஸ்கேன் செய்யும் வசதி மாநகராட்சி மருத்துவமனையில் உள்ளது. இதற்கு அரசு மருத்துவமனைகளுக்குதான் செல்ல வேண்டி உள்ளது.
சென்னையில் புறநகர் பகுதிகளில் உள்ளவர்கள் நகரின் மையப் பகுதிகளுக்கு வர வேண்டி உள்ளது. வந்து செல்ல ஒருநாள் தேவைப்படுகிறது. இதற்கு தீர்வு காண இந்த வசதிகளை எல்லாம் மாநகராட்சி மருத்துவமனைகளில் ஏற்படுத்தி தர வேண்டும்" எனக் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT