Published : 22 Feb 2023 06:47 PM
Last Updated : 22 Feb 2023 06:47 PM
புதுச்சேரி: ‘ஹோட்டலில் பிரியாணி செய்யும் புகையால் மூச்சு விடமுடியவில்லை’ என புதுச்சேரியில் அரசுப் பள்ளிக் குழந்தைகள் புகார் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே உள்ள ஹோட்டலில் பிரியாணி மற்றும் உணவு தயாரிக்கும்போது உணவுக் கூடத்திலிருந்து புகை அருகேயுள்ள பள்ளிக்கு பரவுவதால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, குழந்தைகள் நலக் குழுத் தலைவர் சிவசாமி தலைமையில் உறுப்பினர்கள் சுலோச்சனா, முருகையன், சித்ரா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து குழந்தைகளிடம் இன்று விசாரித்தனர்.
அப்போது குழந்தைகள், “உணவுக் கூடத்திலிருந்து வரும் புகையால் மூச்சு விட முடியவில்லை. புகையை இயந்திரம் மூலம் பள்ளி பகுதிக்கு வெளியேற்றுவதால் மூச்சுத் திணறல் சிலருக்கு ஏற்படுகிறது" என்றனர். அதேபோல் ஆசிரியர்கள் தரப்பில் விசாரித்தபோது அதை உறுதி செய்தனர்.
இதையடுத்து நலக்குழு தலைவர் சிவசாமி கூறுகையில், "அரசுப் பள்ளி ஒட்டியுள்ள ஹோட்டலில் பிரியாணி தயாரிக்கும்போது புகை பள்ளிக்கு பரவுகிறது. உணவுக் கூடத்திலிருந்து புகையை கருவி பொருத்தி வெளியேற்றுகின்றனர். அரசு அரசுப் பள்ளிக்குள் செல்வதாக அமைந்துள்ளது. உணவு தயாரிப்பு கூடத்திலிருந்து வெளியேறும் புகை மற்றும் மசாலா நெடியால் இங்கு படிக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். குறிப்பாக ஆஸ்துமா, மூச்சுத் திணறல், மூச்சு விட முடியவில்லை என்றனர். சுவாச ரீதியான பாதிப்பால், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளோம். அரசுக்கு அறிக்கை அனுப்புவோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT