Published : 22 May 2017 07:55 AM
Last Updated : 22 May 2017 07:55 AM

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு கைகொடுத்த ‘ஸ்பார்க்’ திட்டம்: 10, 12 ம் வகுப்பு தேர்வில் உயர் மதிப்பெண் பெறுவது அதிகரிப்பு

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட ‘ஸ்பார்க்’ திட்டத்தால், இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி கட்டுப் பாட்டில் மொத்தம் உள்ள 281 பள்ளிகளில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 70 உயர்நிலைப் பள்ளிகள் ஆகும். இப்பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் மற்றும் உயர் மதிப்பெண்கள் பெறுவது குறைவாக இருந்தது.

இந்நிலையில், 10, 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தவும், உயர் மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், மாணவர்களிடம் மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வரும் ‘தீப்பொறி’ என பொருள்படும் ‘ஸ்பார்க்’ என்ற புதிய திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் சோதனை அடிப்படையில் கடந்த ஜனவரியில் தொடங்கியது. இத்திட்டத்தால் தற்போது மாணவர்களின் தேர்ச்சி விகிதமும், உயர்மதிப்பெண் பெறுவதும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ‘ஸ்பார்க்’ திட்டத்தை சோதனை அடிப்படையில் தொடங்கி இருக்கிறோம். அதில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்து, பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என வகை பிரித்து, அவர்களை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்லும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

அதற்காக, 5 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமித்து, காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தினோம். மேலும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டது. கூடுதல் பயிற்சி ஏடுகள் மூலமும் பயிற்சி அளிக்கப்பட்டது. காலை உணவும் அளிக்கப்பட்டது.

இதனால், கடந்த ஆண்டு 86.21 சதவீதமாக இருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 88.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் 1100-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 136 ஆக (கடந்த ஆண்டு 61 மாணவர்கள்) உயர்ந்துள்ளது. 1000-க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 524 ஆக (கடந்த ஆண்டு 326 மாணவர்கள்) உயர்ந்துள்ளது. பல்வேறு பாடங்களில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 119 ஆக (கடந்த ஆண்டு 51 மாணவர்கள்) உயர்ந்துள்ளது.

மேலும் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி அளித்த பள்ளிகளின் எண்ணிக்கை 18 ஆக (கடந்த ஆண்டு 16 பள்ளிகள்) உயர்ந்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்வில் 1.8 சதவீதம் தேர்ச்சி குறைந்தாலும், 100 சதவீதம் தேர்ச்சி அளித்த பள்ளிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு பாடங்களில் 100 சதவீதம் மதிப் பெண்கள் வாங்கிய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 78 ஆக இருந்தது. இந்த ஆண்டு 189 ஆக உயர்ந்துள்ளது. 450-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 312 (கடந்த ஆண்டு 249) ஆக உயர்ந்துள்ளது. அதற்கு ‘ஸ்பார்க்’ திட்டம் செயல்படுத்தப்பட்டதுதான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x