Published : 22 Feb 2023 07:13 AM
Last Updated : 22 Feb 2023 07:13 AM
திருவள்ளூர்: ’மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரைவில் சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
பொன்னேரியில் 2 நாளாக நடந்த கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நேற்று நிறைவுபெற்றது. இதில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விரைவில் சென்னையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு நடத்துவது. இதில் பங்கேற்க கேரளாமற்றும் தமிழகம், தெலங்கானா முதல்வர்களை அழைப்பது.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து, பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் கண்டனஆர்ப்பாட்டம், ஏப்ரலில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களையும், தொழிலாளர் களையும் பாதுகாக்க வலியுறுத்தி கோவையில்வரும் மார்ச் 5-ம் தேதி சிறப்பு மாநாட்டை நடத்துவது, இதில் கேரள மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ், தமிழக அமைச்சர் தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும்.
திருவள்ளூர் ராஜாநகரம் கிராமத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய மனைகளில் குடியேற முடியாத நிலையில் உள்ள பட்டியலின மக்களுக்கு, சம்பந்தப்பட்ட இடத்தில் தொகுப்பு வீடுகளை அரசே கட்டிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டம் நிறைவடைந்த பின் பொன்னேரியில் அரசியல் விளக்கம் மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT