Published : 13 May 2017 04:13 PM
Last Updated : 13 May 2017 04:13 PM

கோடை காலத்தில் குழந்தைகள் ஏசி அறையில் இருக்கலாமா?

கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குழந்தைகள், வீட்டில் இருக்கும் முதியோர்கள், கர்ப்பிணிகளும் சூட்டால் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனால் பெரும்பாலான குடும்பங்களில் ஏசி அமைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இது சரியா?

கோடை காலத்தில் அதிகம் பசிக்காதது ஏன், பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா என்பன உள்ளிட்ட ஏராளமான கோடை கால சந்தேகங்களோடு குழந்தைகள் நல மருத்துவர் குணசிங்கிடம் பேசினோம்.

குழந்தைகள் ஏசி அறையில் இருக்கலாமா?

பொதுவாகவே ஏசி உடம்புக்குக் கெடுதல் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் நம்முடையது மாதிரியான வெப்ப மண்டலப் பிரதேசங்களில் குறிப்பாகக் கோடை காலங்களில் குழந்தைகளை ஏசி அறையில் இருக்கலாம். அதில் எந்தத் தவறுமில்லை.

தூசி, குப்பை, வெயில், வியர்வை என மாசுபாட்டையும், அசவுகரியத்தையும் குறைக்க ஏசி போட்டுக் கொள்ளலாம். சுமார் 24- 26 டிகிரி வெப்பநிலையில் ஏசி இருக்க வேண்டும். உரிய ஆடைகளை அணிவித்து, அம்மாவின் அணைப்பில் குழந்தையை இருப்பது நலம் பயக்கும். அதே நேரத்தில் ஏசியை முறையாக 3 மாதங்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்த வேண்டும்.

6 மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கலாமா?

வெயில் காலம், தொண்டை காய்கிறது, நாக்கு வறண்டுவிட்டது என்று கூறி, கைக்குழந்தைகளுக்கு நீர் கொடுக்கக் கூடாது.

அவர்களுக்குத் தாய்ப்பாலை மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பாலில் 85% நீர்ச்சத்து உள்ளது.

சிறுநீர் மஞ்சளாகப் போனால், போதிய அளவு நீர் கிடைக்கவில்லை என்று அர்த்தம். அதற்கேற்றவாறு தாய்ப்பாலைக் கொடுக்க வேண்டும். தாய்மார்கள் அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

வெளியில் அழைத்துச் செல்லலாமா?

கோடை காலத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லக் கூடாது. சில சமயங்களில் அதிக வெப்பத்தால் குழந்தைகளுக்கு வலிப்பு (Heat Stroke) ஏற்படவும் வாய்ப்புள்ளது. தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் காலை 9 மணிக்குள்ளாகவும், மாலை 5 மணிக்குப் பிறகும் அவர்களை அழைத்துச் செல்லலாம்.

சத்து பானங்கள் நல்லதா?

இல்லை. கடைகளில் தயாரிக்கப்படும் பானங்கள் உண்மையிலேயே அதிகக் கொழுப்பையும், சர்க்கரையையும் கொண்டிருக்கின்றன. 2 வயது வரை அவற்றை முற்றிலுமாகத் தவிர்த்துவிடுவது மிகவும் நல்லது. அதேபோல பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளும் உடலுக்குக் கேடு விளைவிக்கும்.

என்ன மாதிரியான உடைகளை உடுத்தலாம்?

பருத்தி ஆடைகளே சிறந்த தேர்வு. இறுக்கமான ஆடைகளை அணியாமல், தளர்வாக அணிவிக்கலாம். தினமும் குறைந்தபட்சம் 2 முறை குளிப்பாட்ட வேண்டும்.

குடிக்க ஐஸ் வாட்டர் கொடுக்கலாமா?

சிறு குழந்தைகளுக்கு ஐஸ் வாட்டர் கொடுக்கக் கூடாது. வளர்ந்த சிறுவர், சிறுமியருக்கு குளிர் நீருடன் சாதாரண நீரைக் கலந்துகொடுக்கலாம். ஐஸ் துண்டுகளைச் சாப்பிட அனுமதிக்கக் கூடாது.

கோடை காலத்தில் அதிகம் பசிக்காதது ஏன்?

பெரும்பாலான குழந்தைகள் இந்த நேரத்தில் பசியில்லை என்று கூறுவர். இதற்குக் காரணம் அவர்கள் அதிகத் தண்ணீரை உட்கொள்வதுதான். அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. பசிக்கு டானிக் கொடுப்பது சரியான முறையல்ல.

பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

பழங்கள் உண்டால் சளி பிடிக்கும் என்பது மிகவும் தவறான கருத்து. இரண்டுக்கும் சம்பந்தமே இல்லை.

பழச்சாறை அதிகம் அருந்தினால் வயிற்றுப்போக்கு ஏற்படுமா

ஆம், குழந்தைகள் லிட்டர் கணக்காகப் பழச்சாறு அருந்துதல் முறையல்ல. அப்படிச் செய்தால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x