Published : 21 Feb 2023 12:17 PM
Last Updated : 21 Feb 2023 12:17 PM
சென்னை: பாஜக உண்ணாவிரதப் போராட்டத்தில் திமுகவிற்கு எதிராக வெடிகுண்டு வைப்போம் என்று ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன், "இந்திய ராணுவத்தில் பணிபுரியும் பிரபுவை திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் படுகொலை செய்துள்ளார். நான் உன்னை என்ன செய்தாலும் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது, எனக்கு என்னுடைய திமுக தலைவர்கள் ஆதரவாக இருக்கிறார்கள். எனவே நான் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று இதை செய்து உள்ளார்.
திமுக கொள்ளை அடிப்பதிலும், கொலை செய்வதிலும் தைரியமானவர்கள். ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுட தெரிந்தவர்கள். வெடிகுண்டு வைக்க தெரிந்தவர்கள். இது போன்ற செயல் இனி நடைபெற்றால் நாங்கள் திமுகவுக்கு எதிராக வெடிகுண்டு வைப்போம்" இவ்வாறு அவர் பேசினார்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இப்படி வன்முறையை தூண்டும் விதத்தில் பேசுவது முறையா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, செய்தியாளர்களை திமுகவின் கைக் கூலிகள் என்று விமர்சித்தார். இதனால் செய்தியாளர்களுக்கும், அவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT