Published : 21 Feb 2023 07:04 AM
Last Updated : 21 Feb 2023 07:04 AM

‘பிட்ஸ் ஏர்’ நிறுவனம் சார்பில் கொழும்பு - சென்னை இடையே புதிய விமான சேவை: பல்வேறு சலுகைகள் அறிவிப்பு

சென்னை: ‘பிட்ஸ் ஏர்’ நிறுவனம் சார்பில் புதிய சலுகைகளுடன் கொழும்பு-சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது.

இலங்கையின் சர்வதேச விமான நிறுவனமான ‘பிட்ஸ் ஏர்’ என்ற தனியார் நிறுவனம், இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு முதல் விமான சேவையை நேற்று தொடங்கியது. வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் இந்த விமான சேவை, ஏப்ரல் மாதத்துக்கு பிறகுதினசரி சேவையாக இயக்க ‘பிட்ஸ் ஏர்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பிட்ஸ் ஏர் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அம்மார் காசிம் கூறியதாவது:

அறிமுக சலுகை கட்டணம்: கொழும்பு-சென்னை இடையேயான சேவை ‘பிட்ஸ் ஏர் A320' ரக விமானத்தால் இயக்கப்படுகிறது. இதில் பயணிகளுக்கு வசதியான இருக்கைகள் மற்றும் வசதியான விமான நேரங்கள் உள்ளன.

இந்த விமானத்தின் அறிமுகசலுகையாக ரூ.13,710 கட்டணத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய ‘ரிட்டர்ன்’ டிக்கெட்டும் வழங்கப்படுகிறது.

இதேபோல், பல்வேறு சலுகைகள் பயணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் சென்னை நகரத்துக்கு குறைந்த கட்டணத்தில் வசதியான சேவையை ‘பிட்ஸ் ஏர்' நிறுவனம் பயணிகளுக்கு வழங்கும்.

சுற்றுலா ஊக்குவிப்பு: மேலும், இலங்கை-இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் இந்த புதிய விமான சேவை உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம். சென்னை தென் இந்தியாவின் மையமாகவும், பிற நகரங்களுக்கு சிறந்த ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை கொண்டுள்ளது.

’பிட்ஸ் ஏர்’ -ன் சென்னை விமான சேவை என்பது, இந்நிறுவனத்தின் தற்போதைய விரிவாக்க முயற்சியின் ஒரு பகுதியாகும். மிகவும் திறமையான அனுபவம் வாய்ந்த ஊழியர்களை ’பிட்ஸ் ஏர்’ நிறுவனம் கொண்டுள்ளது. மேலும், அடுத்த காலாண்டில் 3 புதிய இடங்களுக்கு சேவை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x