Published : 21 Feb 2023 06:48 AM
Last Updated : 21 Feb 2023 06:48 AM
சென்னை: தெற்கு ரயில்வேயில் புதிய திட்டங்கள், பயணிகள் வசதிகள் உள்பட பல்வேறு செயல் திட்டங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரயில்வே அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை (பிப்.22) நடைபெறவுள்ளது.
தெற்கு ரயில்வேயில் சென்னை, சேலம், மதுரை, திருச்சிராப்பள்ளி, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்கள் உள்ளன.இக்கோட்டங்களை உள்ளடக்கிய எம்.பி.க்களுடன் ரயில்வே திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில், நடப்பாண்டில் சென்னை கோட்டத்தில் ரயில்வே திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ளதெற்கு ரயில்வே தலைமையகத்தில் பிப்.22-ம் தேதி நடைபெறவுள்ளது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமைவகிக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
சேலம் கோட்டத்தில் பிப்.23-ம்தேதியும், திருவனந்தபுரம் கோட்டத்தில் மார்ச் 1-ம் தேதியும், பாலக்காடு கோட்டத்தில் மார்ச் 2-ம் தேதியும், மதுரை கோட்டத்தில் மார்ச் 8-ம் தேதியும், திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் மார்ச் 9-ம் தேதியும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
மத்திய பட்ஜெட்டில், தெற்குரயில்வேக்கு 2023-24-ம் நிதியாண்டுக்கு ரூ.11,314 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் புதியபாதை, அகலப்பாதை, இரட்டைப்பாதை என பல்வேறு திட்டப் பணிகளுக்கு மட்டும் ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக, ரூ.1,081 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் இந்த முறை போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், பல்வேறு ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக எம்.பி.க்கள் கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT