Published : 21 Feb 2023 06:35 AM
Last Updated : 21 Feb 2023 06:35 AM

கொசுக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் மாநகராட்சி: சென்னையில் ஒரு வார தீவிர நடவடிக்கையால் பலன் இல்லை

சென்னை: சென்னையில் அதிகரித்துள்ள கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி சார்பில் ஒரு வாரம் தீவிர கொசு ஒழிப்புப் பணி மேற்கொண்டும் பலன் கிடைக்காததால், கொசுக்களை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.

சென்னை மாநகரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக கொசுத் தொல்லை இருக்கும். ஆனால், தற்போது எல்லா இடங்களிலும் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மாநகராட்சி, கடந்த பிப்.12-ம் தேதி முதல் தீவிர கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 18-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மழைநீர் வடிகால்களில் 3 ஆயிரத்து 104 கிமீ நீளத்துக்கு கொசுக்கொல்லி மருந்து தெளித்தும், 3 ஆயிரத்து 133 கிமீ நீளத்துக்கு கொசு ஒழிப்புப் புகை பரப்பி இருப்பதாகவும், 32 ஆயிரத்து 40 தெருக்களில் கொசு ஒழிப்புப் புகை பரப்பி இருப்பதாகவும், நீர்நிலைகளில் 536 கிமீ நீளத்துக்கு ட்ரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டு இருப்பதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் 600 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் தேங்கியிருந்த நீர், இயந்திரங்கள் மூலம் இரைத்து வெளியேற்றப்பட்டதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மாநகரில் கொசுத் தொல்லையும், அவற்றின் அடர்த்தியும் குறைந்தபாடில்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீட்டு ஜன்னலில் கொசு வலைகளை நிறுவிஇருந்தாலும், கதவைத் திறந்தால்கொசுக்கள் உள்ளே வந்துவிடுகின்றன. அந்த அளவுக்குக் கொசுக்களின் அடர்த்தி அதிகரித்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி மேற்கொண்டு வரும் பணிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வீடுகளுக்குள் பைரித்ரம், வீடுகளுக்கு வெளியே மாலத்தியான் மருந்தைப் பயன்படுத்தி புகை பரப்ப வேண்டும். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் எல்லா இடத்துக்கும் பைரித்ரம் மருந்தை மட்டுமே பயன்படுத்தி வருகிறது.

இது வெயில் வந்துவிட்டால் நல்ல பலனைத் தராது. சாலைகளில் புகை பரப்பும்போது, குடியிருப்பு வாசிகளின் அனுமதி பெற்று, வீடுகளுக்குள்ளும், சுற்றுப்புறங்களிலும், அந்த சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்களிலும் ஒரே நேரத்தில் புகை பரப்ப வேண்டும். இவ்வாறு மாநகராட்சி பணியாளர்கள் செய்வதில்லை என்பது பூச்சியியல் வல்லுநர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

அண்மையில் அனைத்து மாநகராட்சி ஆணையர்களுக்கும் மாநிலபொது சுகாதாரத் துறை சார்பில் கொசு ஒழிப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டன. அதில் பொத்தாம்பொதுவாக அனைத்து மாநகராட்சிகளுக்கான வழிகாட்டுதல்களே இருக்கிறது. சென்னை போன்ற கடற்கரையோர நகரங்களில் காற்று வீசுவது அதிகமாக இருக்கும். உள் மாவட்ட நகரங்களைவிட வெப்பநிலை குறைவாகவே இருக்கும்.

அதனால் சென்னை போன்ற மாநகரங்களுக்கென தனி வழிகாட்டுதல்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற காரணங்களாலே கொசுக்கள் ஒழியவில்லை எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ``ஒரு வார தீவிர பணியில் கொசு புழுக்கள் உற்பத்தி கட்டுக்குள் வந்துவிட்டது. முதிர் கொசுக்களை அழிப்பதற்காக 2-வது சுற்று பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில் கூவம் ஆற்றின் முகத்துவாரப் பகுதியைத் திறந்துவிட்டு, கடல் அலைகள் ஆற்றில்வந்துசெல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உப்புநீர் ஆற்றுக்குள் வந்து செல்லும்போது, கொசு உற்பத்தி மேலும் குறையும். சாதகமான வானிலை காரணமாகவே கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. வரும் மார்ச் மாதம் வரை சென்னையில் குளிர் நிலவும் எனக் கருதப்படுகிறது. ஓரிருவாரங்களில் முதிர் கொசுக்களைக்கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x