தருமபுரி | முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற வட்டாட்சியர் மாரடைப்பால் உயிரிழப்பு
தருமபுரி: தருமபுரியில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் இறகுப் பந்து போட்டியில் பங்கேற்றபோது மாரடைப்பு ஏற்பட்டு வட்டாட்சியர் உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்ட இலங்கைத் தமிழர்கள் முகாம்களுக்கான வட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் ச.அதியமான்(54). தருமபுரி மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2 வாரங்களாக தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடந்து வருகிறது. அதில், அரசு பணியாளர்களுக்கான பிரிவு விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது.
இன்று (20-02-23) மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்த இறகுப் பந்து போட்டியில் வட்டாட்சியர் ச.அதியமான் பங்கேற்று விளையாடியுள்ளார். விளையாட்டின் இடையே திடீரென மயங்கிய வட்டாட்சியருக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர். ஆனாலும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பு குறித்து அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த வட்டாட்சியர் அதியமானின் மனைவி தங்கமீனாட்சி(50), அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 13 வயதுடைய மகள் மற்றும் 10 வயதுடைய மகன் உள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்து கிராமப்புற இளையோர் மத்தியில் அதியமான் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், பலரும் அரசுப் பணிகளுக்கு செல்ல ஊக்கமளித்து வந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது. அவரது மறைவு தருமபுரி மாவட்ட அரசு பணியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
