Published : 20 Feb 2023 07:17 PM
Last Updated : 20 Feb 2023 07:17 PM
சென்னை: கடலூர் சிறையில் உள்ள கைதிகளுக்கு புத்தகம் வழங்க அனுமதிக் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சவுக்கு சங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடலூர் சிறையில் உள்ள கைதிகள் படிப்பதற்காக பதினைந்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள 76 புத்தகங்களை இலவசமாக வழங்க முடிவு செய்து அதனை பெற்றுக்கொள்ளுமாறு சிறைத் துறை டிஜிபிக்கு கடிதம் எழுதினேன். ஆனால், அரசியல் காரணங்களால் எனது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள சிறைத் துறை மறுத்து விட்டது. எனவே, எனது புத்தகங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சிறைத் துறை டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்தப் புத்தகங்களை நீங்கள் படித்திருக்கீர்களா? இந்தப் புத்தகங்கள் கைதிகளின் வாழ்க்கைக்கு உதவும் என்று எப்படி கூறுகிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார்.
பின்னர், விளம்பர நோக்கத்திற்காக இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படும் முன் புத்தகங்கள் குறித்து நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் எனக் கூறி சவுக்கு சங்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT