Published : 20 Feb 2023 06:28 PM
Last Updated : 20 Feb 2023 06:28 PM

ஜேஎன்யு தாக்குதல் சம்பவத்துக்கு அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்: திருமாவளவன்

திருமாவளவன் | கோப்புப் படம்

சென்னை: ஜேஎன்யுவில் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஏபிவிபி என்னும் பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பைச் சார்ந்த குண்டர்கள் பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் உருவப்படங்களை அவமதித்துச் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தட்டிக்கேட்ட தமிழகத்தைச் சார்ந்த மாணவர் தமிழ்நாசர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். தலையில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏபிவிபி குண்டர்களின் இந்த வன்முறை வெறியாட்டத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களிலும் வெறுப்பு அரசியலை விதைத்து அப்பாவி மாணவர்களையும் சாதி- மதவெறி கொண்டவர்களாக வளர்த்து மாணவச் சமூகத்தையே பிளவுபடுத்தி, மோதவிட்டு, ரத்தம் சிந்த வைத்து அதனையே ஒரு சாதனையாக் கருதும் பிற்போக்குவாதிகளான பாஜகவின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையையும் வன்மையாக க் கண்டிக்கிறோம்.

உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான ஜேஎன்யுவில் நடந்துள்ள இந்த வன்முறைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்க வேண்டும். அத்துடன், இவை போன்ற நடவடிக்கைகள் தொடராமல் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்திட முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். பெரியார், மார்க்ஸ் ஆகியோரின் படங்களை அவமதித்த, வன்முறையில் ஈடுபட்ட ஏபிவிபி மாணவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்கலைக்கழக நிர்வாகத்தை வலியுறுத்துகிறோம்" என்று அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x