Published : 20 Feb 2023 05:41 PM
Last Updated : 20 Feb 2023 05:41 PM
புதுச்சேரி: செல்வமகள் சேமிப்பு கணக்கை துவங்கும்போது பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் கணக்கு தொடங்கும்போது கூடுதலான தொகை செலுத்துவதற்கு புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது என்று முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார்.
புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தினவிழா கம்பன் கலையரங்கில் இன்று நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியதாவது: ''மகளை காப்போம், மகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் மக்களுக்கு தெரிய வேண்டும். பெண் பிள்ளைகள் பிறந்தால் திருமணத்துக்கு என்ன செய்வது என்று கருதி பயந்த சூழல் குறிப்பிட்ட சிலரிடம் ஒரு காலத்தில் இருந்தது. அந்த நிலையில் தான் மகளைக் காப்போம் - கற்பிப்போம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஆண் குழந்தைகளை பாராட்டி உயர்த்தி பேசுவது, பெண் குழந்தைகளை அலட்சியப்படுவது போன்று இல்லாமல் சமமாக பார்க்க வேண்டும். பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு அன்பு காட்டி நன்றாக வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது. குழந்தைகளில் ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாத நிலை இருந்தால் நிச்சயமாக உயர முடியும்.
தாழ்வு மனப்பான்மை மனதில் ஏற்படக் கூடாது. தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டால் அது எல்லாவிதத்திலும் குழந்தைக்கு இருக்கும் ஆர்வத்தை குறைத்துவிடும். அனைத்து இடங்களிலும் பெண்கள் உயர்ந்து நிற்கிறார்கள். அடிப்படையில் பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மை இல்லாத நிலையில் சமமாக பாவிக்கும்போது, அவர்கள் ஆர்வத்துடன் வளர்ந்து நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நிலையில் இருக்கிறார்கள்.
ஆண்களுக்கு நிகரானவர்கள் பெண்கள். சமமான வளர்ச்சி இருக்கும் போது நாட்டின் வளர்ச்சியும் பொருளாதாரமும் உயரும். செல்வமகள் சேமிப்பு திட்டத்தை பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் கணக்கு தொடங்கும்போது கூடுதலான தொகை செலுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. பெண்களின் வளர்ச்சி என்பது நாட்டின் வளர்ச்சி” என்று குறிப்பிட்டார். இந்நிகழ்வில் பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், ஆட்சியர் மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT