Published : 20 Feb 2023 01:44 PM
Last Updated : 20 Feb 2023 01:44 PM
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவிற்கு எதிரான அலை உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முறைகேடு நடப்பதாக சென்னை, தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை நேரில் சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினசரி விற்பனையாகும் தொகை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் நபரிடம் கொடுக்கப்பட்டு தொகுதிக்கு வெளியே உள்ள வங்கியில் டெபாசிட் செய்யப்படுகிறது. தேர்தல் ஆணைய கண்ணில் மண்ணை தூவிவிட்டு இந்தப் பணியை செய்து வருகின்றனர். எனவே தொகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை கண்காணிக்க வேண்டும் என்று புகார் அளித்து உள்ளோம்.
மக்கள் இந்த ஆட்சியை விரும்பவில்லை. மக்கள் ஆட்சிக்கு எதிராக உள்ளனர். ஆட்சிக்கு எதிரான அலை உள்ளது. கட்டுப்பாடு இல்லாமல் டாஸ்மாக் விற்பனை நடந்து வருகிறது. இது சரக்கு அரசு. அதிகாலையில் முதல் இரவு வரை டாஸ்மாக் கடைகள் திறந்து உள்ளன. எங்களின் ஆட்சியில் டாஸ்மாக் நிர்வாகத்தில் எந்த சட்டவிரோத சம்பவங்களும் நடைபெறவில்லை.
கொலை, கொள்ளை இல்லாத நாள் எது என்று சொல்ல முடியுமா. தினந்தோறும் கொலை, கொள்ளை. இந்த ஆட்சியில் போலீஸ் செயல்படவில்லை. எதிர்க்கட்சிகளை பழிவாங்க மற்றும் ஆளும் கட்சியை வெற்றி பெற மட்டுமே போலீஸ் பயன்படுத்தப்படுகிறது. அதிமுக ஆட்சியில் காக்கிச் சட்டை போடுவது கெளரவம். இந்த ஆட்சியில் ஏண்டா போடுகிறோம் என நினைக்கிறார்கள்." இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT