Last Updated : 20 Feb, 2023 07:06 AM

1  

Published : 20 Feb 2023 07:06 AM
Last Updated : 20 Feb 2023 07:06 AM

விற்பனை அதிகரிப்பால் தினமும் 60 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் வசதி: உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ஆவின் திட்டம்

கோப்புப்படம்

சென்னை: பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் தினமும் 60 லட்சம் லிட்டர் பாலை பதப்படுத்தும் வகையில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது கொழுப்புச் சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து, விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர, வெண்ணெய், நெய்,தயிர், பால்கோவா, மோர், லஸ்ஸி,ஐஸ்கிரீம் உள்ளிட்ட 225 வகையான பால் பொருட்களை தமிழகம்முழுவதும் தயாரித்து, ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு தினசரி பால் விற்பனை 27 லட்சம் லிட்டராக இருந்த நிலையில், தற்போது தினசரி விற்பனை 30 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. இதுதவிர, பனீர், ஐஸ்கிரீம், நெய், வெண்ணெய் உள்ளிட்டவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது.

ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும் நிலையில், அதற்கேற்ப ஆவின் பால் பண்ணைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகிறது. அதற்கான நடவடிக்கையில் ஆவின் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் ந.சுப்பையன் கூறியதாவது: தமிழகத்தில் 23 பால் பண்ணைகளில், மொத்தம் 48.78 லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் திறன் உள்ளது. வருங்காலங்களில் இந்த அளவு போதுமானதாக இருக்காது. அடுத்த 3 ஆண்டுகளில் 60 லட்சம் லிட்டர்பாலைப் பதப்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக ஆவின் பால் பண்ணைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. மாதவரத்தில் ரூ.110 கோடியில் 10 லட்சம் லிட்டர்பாலைப் பதப்படுத்தும் வகையில் புதிய பால் பண்ணை அமைக்கப்பட உள்ளது. ஏற்கெனவே, மாதவரத்தில் தினமும் 5 லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் ஆலை உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் ரூ.18 கோடியில் பால் பண்ணை கட்டப்பட உள்ளது. இங்கு நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் பால் கிடைக்கும்.

இந்த திட்டத்துக்கு நபார்டு வங்கிநிதியுதவி அளிக்கிறது. இந்த பால்பண்ணை வடிவமைப்பு, நிறுவுதல், சோதனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

பெரம்பலூர் மாவட்டம் பாடலூரில் ரூ.150 கோடி மதிப்பில், தினமும் 6 லட்சம் லிட்டர் பாலைப்பதப்படுத்தி, பால் பவுடர் தயாரிக்கும் பண்ணை கட்டப்பட உள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன், அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பால்பண்ணை தயாராகிவிடும்.

நாமக்கல் ஒன்றியத்தில் ரூ.50 கோடியில் தினமும் ஒரு லட்சம் லிட்டர், தூத்துக்குடி, கடலூர், கரூர், தருமபுரி ஒன்றியங்களில் தலா 50 ஆயிரம் லிட்டர் பாலைப் பதப்படுத்தி, விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தலாரூ.10 கோடி செலவிடப்பட உள்ளது.

சேலத்தில் தினமும் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இங்கு 7 லட்சம் லிட்டர் பாலைக் கையாளும் வகையில், பதப்படுத்தும் ஆலை அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, 30 டன் பால் பவுடர் உற்பத்தி ஆலையும் அமைக்கப்பட உள்ளது. இவை அனைத்தும் அடுத்த 2 ஆண்டுகளில் தயாராகிவிடும்.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமாக, கூடுதல் பால் மற்றும் பால் பொருட்களைப் பதப்படுத்த முடியும். விவசாயிகளிடம் அதிகம் பால் கொள்முதல் செய்வதன் மூலம், அவர்களும் பயனடைவர். நுகர்வோருக்கும் நியாயமான விலையில், தரமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- மு.வேல்சங்கர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x