Published : 19 Feb 2023 06:41 PM
Last Updated : 19 Feb 2023 06:41 PM
திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகம் காணப்படும், ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா பகுதிகளில் காட்டுமாடுகள் உலா வந்ததால் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. மோயர் பாய்ண்ட் பகுதியில் மேகக்கூட்டங்கள் பள்ளத்தில் இருந்து மேலே எழும்பி வந்ததை சுற்றுலாப் பயணிகள் ரசித்தனர். தூண்பாறையை மேகக்கூட்டங்கள் மறைத்ததால் காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். பைன்பாரஸ்ட், குனாகுகை, பசுமைப் பள்ளத்தாக்கு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்ததால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
நகரின் மையப்பகுதியில் உள்ள ஏரிச்சாலை, பிரையண்ட் பூங்கா பகுதியைக் காணவந்த சுற்றுலாப் பயணிகள் காட்டுமாடுகள் நடமாட்டத்தால் அச்சமடைந்தனர். பிரையண்ட் பூங்காவிற்குள் சென்று காட்டுமாடுகள் வெளியேறும் வரை பாதுகாப்பாக பூங்காவின் கதவை அடைத்துக்கொண்டனர். ஒரு வழியாக காட்டுமாடுகள் வனத்துறை தங்கும்விடுதி உள்ள பகுதிகளை கடந்து சென்றபின், சுற்றுலாப் பயணிகள் நிம்மதியடைந்தனர். ஏரியில் படகுசவாரி செய்தும், குதிரை ஏற்றம் செய்தும் மகிழ்ந்தனர்.
கொடைக்கானலில் அதிகாலையில் உறைபனி காணப்பட்டாலும், பகலில் குளிருடன் கூடிய வெயில் என இதமான தட்பவெப்பநிலை நிலவுவது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது. கொடைக்கானலில் நேற்று அதிகபட்சமாக பகலில் 19 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவில் குறைந்தபட்சமாக 8 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவியது. காற்றில் 50 சதவீதம் ஈரப்பதம் காணப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT