Published : 19 Feb 2023 05:57 PM
Last Updated : 19 Feb 2023 05:57 PM
சென்னை: ஆன்லைன் சூதாட்டத்திற்கு 45-ஆவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஆளுநர் மனம் இரங்காதா? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: ''கோவை வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த மோகன்குமார் என்ற பட்டதாரி ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் உடல்நல பாதிப்புகள் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டம் எந்த அளவுக்கு மனிதகுலத்தை வேட்டையாடுகிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழ்ந்திருக்கும் 45ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கை ஆகும். அதற்காக திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு 125 நாட்களாகியும் அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுப்பது ஏற்க முடியாதது ஆகும்.
ஆன்லைன் சூதாட்டமும், அதற்கு அடிமையாகி இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாவது அனுமதிக்க முடியாது. எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.'' இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT