Published : 19 Feb 2023 09:28 AM
Last Updated : 19 Feb 2023 09:28 AM
கோவை: கோவை ஈஷாவில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் பேசிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அறியாமையின் இருள் அழிந்து ஞானோதயத்தின் ஒளி உதிக்கும் காலத்தை மகா சிவராத்திரி குறிப்பதாக கூறினார்.
கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தார். அவரை சத்குரு வரவேற்று, ஈஷா மையத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று அவ்விடங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
சூர்ய குண்டம், நாகா சன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபட்ட குடியரசுத் தலைவர் நந்திக்கு தாமரையை அர்ப்பணித்தார். இதைத் தொடர்ந்து லிங்க பைரவி கோயிலுக்கு சென்று தாக நிவாரணம் உள்ளிட்ட அர்ப்பணங்களை செய்தார். தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்சபூத க்ரியையில் பங்கேற்றார்.
குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு மாநில தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.
விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசியதாவது: மகா சிவராத்திரி விழாவில் ஓர் அற்புதமான சக்தி இருப்பதை நாம் உணர்கிறோம்.
சிவன் முழுமையான ஆணாக கருதப்பட்டாலும், பாதி ஆண், பாதி பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார். மனிதர்கள் அனைவரும் சரிசமம் என்பதை இது குறிக்கிறது. பாலின சமத்துவத்தை அவர் குறிக்கிறார். தேடுதலில் உள்ள ஒருவர் பக்தராக இருந்தாலும், ஞானியாக இருந்தாலும், யோகியாக இருந்தாலும், சிவனின் காலடியில் சரணாகதியாவது அவர்களின் நோக்கத்தை நிறைவேற்ற உதவும்.
சிவன் அனைவருக்குமான தெய்வமாக இருக்கிறார். அவர்தான் முதல் ஞானியும்கூட. மனிதகுலத்துக்கு பெரிய ஞானத்தை அவர் வழங்கி உள்ளார். சிவன் கருணை மிக்கவர். ஆனால், பல்வேறு விதங்களில் உக்கிரமானவராகவும் உள்ளார். 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்பியல் முன்னேறிய காலத்தில், அணுத்துகள்களின் அசைவை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்த போது நடனமாடும் நடராஜரின் அசைவுக்கு ஒத்த அணுத்துகள்களின் அசைவை அவர்கள் கவனித்தனர்.
அறியாமையின் இருள் அழிந்து ஞானோதயத்தின் ஒளி உதிக்கும் காலத்தையும் மகா சிவராத்திரி குறிக்கிறது. இந்த மகாசிவராத்திரி நமக்குள் இருக்கும் இருளை அகற்றி அனைவருக்கும் நிறைவான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டும். மகா சிவராத்திரியின் ஆன்மிக ஒளி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுக்கும் ஒளியூட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT