Published : 19 Feb 2023 04:48 AM
Last Updated : 19 Feb 2023 04:48 AM

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 90 பேர் பணிநீக்கம் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தகவல்

சென்னை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 90 பணியாளர்கள் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழகம் முழுவதும் 2,498 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

நடப்பு கொள்முதல் பருவத்தில், தற்போது வரை 16 லட்சம் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் பெயர் மற்றும் இதர விவரங்கள் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெற்று, இணையதளம் வாயிலாக 100 சதவீதம் நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான மொத்த தொகையும் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப் படுகிறது.

இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து லஞ்சம் பெறுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து, இதுகுறித்து கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே இதுபோன்ற புகார்களின் அடிப்படையில் ஆய்வு செய்ததில், முறைகேட்டில் ஈடுபட்ட 90 நேரடி நெல் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கடந்த வாரம் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தற்போது டெல்டா மாவட்டங்களில் கூடுதல் பதிவாளர் தலைமையில் 9 பணிக்குழு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அதிரடி ஆய்வு நடத்தப்படுகிறது.

மாவட்ட அளவில் பணிபுரியும் அலுவலர்களும் கள ஆய்வு மேற்கொண்டு, கண்காணிப்புப் பணியை தீவிரப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முறைகேட்டில் ஈடுபடும் பணியாளர்கள் மீது தவறின் தன்மைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளவும், அதிகபட்சமாக நிரந்தரமாக பணி நீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகளும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தவறு ஏதேனும் இருப்பின், மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கும் (எண்: 1800 599 3540) தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x