Published : 19 Feb 2023 04:07 AM
Last Updated : 19 Feb 2023 04:07 AM
கரூர்: சிறுத்தையை பிடிக்க 4 கூண்டுகள், வனத்துறை அதிவிரைவு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்த அத்திப்பாளையத்தில் வன விலங்கு நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்டதால் வன விலங்கை பிடிப்பதற்காக வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கூண்டுகள் வைக்கும்பணி அப்பகுதியில் நேற்று (பிப். 18 தேதி) நடைபெற்றது.
ஆட்சியர் த.பிரபுசங்கர் கூண்டுகள் வைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், "க.பரமத்தி ஒன்றியம் அத்திப்பாளையம்புதூர் பகுதியில் நாச்சிமுத்து ஆட்டுப்பட்டியில் ஒரு ஆடு இறந்த நிலையிலும், ஒரு ஆடு காயமுற்ற நிலையிலும் கண்டறியப்பட்டது குறித்த தகவல் கிடைத்தவுடன் வனத்துறை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆடு இருந்த இடத்தின் அருகாமையில் பதிந்துள்ள வனவிலங்கின் கால் தடத்தை வைத்து ஆய்வு செய்தப்போது அது சிறுத்தை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் அருகேயுள்ள நாமக்கல் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அறியப்பட்டு அதை ஆய்வு செய்தப்போது எடுக்கப்பட்ட கால் தடமும் தற்போது இங்கு எடுக்கப்பட்ட கால் தடமும் பெருமளவு ஒற்றுமையாக உள்ளதால் அந்த சிறுத்தை இடம்பெயர்ந்து இங்கு வந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த சிறுத்தையை பிடிப்பதற்காக 4 கூண்டுகள், 3 வலைகள், வனத்துறையைச் சேர்ந்த அதிவிரைவுபடையினர் கொடைக்கானலில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக இரவு நேரங்களிலும் நன்றாக பதிவாககூடிய வகையில் 19 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
எனவே, மாலை நேரங்களில் குழந்தைகள், பொதுமக்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியில் வரவேண்டாம். அவசியம் இருந்தால் 2, 3 பேராக சேர்ந்து கையில் கம்பு, கைவிளக்குடன் வரவேண்டும். ஆட்டுப்பட்டிகளில் இரவு முழுவதும் விளக்குகளை எரிய விடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சுற்றுவட்டார பகுதகிளில் 5 கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 24 மணி நேரமும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சிறுத்தையை பிடிப்பதற்கான பல்வேறு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்" என்றார்.
ஆய்வின்போது மாவட்ட வன அலுவலர் சரவணன், ஓசூர் வன உயிரின கால்நடை மருத்துவர் பிரகாஷ், கரூர் கோட்டாட்சியர் பா.ரூபினா, புகழூர் வட்டாட்சியர் முருகன், அத்திப்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT