Published : 18 Feb 2023 07:54 PM
Last Updated : 18 Feb 2023 07:54 PM

‘நாட்டு மக்கள் நலனுக்காக வேண்டினேன்” - மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அங்குள்ள வருகைப் பதிவேட்டில் குறிப்புகள் எழுதினார்.

மதுரை: “நாட்டு மக்களின் நலன், தேசத்தின் வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்தேன்” என மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தபின் அங்குள்ள வருகைப் பதிவேட்டில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு எழுதியுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தமிழகத்திற்கு முதன்முறையாக சனிக்கிழமை இரண்டு நாள் பயணமாக புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு காலை 11.40 மணிக்கு வந்தடைந்தார். அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி , அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மேயர் இந்திராணி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட குடியரசுத் தவைர் மீனாட்சி அம்மன் கோயில் சன்னதிக்கு 12.01மணிக்கு வந்தார்.

பின்னர் 12.05 மணிக்கு அம்மன் சன்னதி வாசல் வழியாக கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்தார். அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கொடிமரம், துர்க்கை அம்மன் சன்னதிகளில் வழிபாடு செய்தார். பின்னர் மீனாட்சி அம்மன் கோயிலிலுள்ள வருகைப் பதிவேட்டில் தமது அனுபவத்தை குறிப்புகளாக எழுதினார். பின்னர் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.

அப்போது, வருகைப்பதிவேட்டில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எழுதியது: “பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரம்மாண்ட கோபுரங்கள், கலைநயமிக்க கற்சிற்பங்கள், கட்டிடக்கலை ஆகியவை தெய்வீக அனுபவத்தை தருகின்றன. நாட்டு மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் வளர்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்தேன்” என்று குறிப்புகள் எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

சர்ப்ரைஸ் கைகுலுக்கள்: மதியம் 12.56 மணிக்கு அழகர்கோவில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்றார். செல்லும் வழியில் கோயிலுக்கு அருகேயுள்ள கீழவெளி வீதியில் குடியரசு தலைவரைக்காண பள்ளிக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் சாலையோரங்களில் நின்று கையசைத்தனர்.

அப்போது, குழந்தைகளைப் பார்த்த குடியரசு தலைவர் காரை நிறுத்தச் சொன்னார். உடனே காரிலிருந்து இறங்கிய குடியரசுத் தலைவர் நேராக நடந்து சென்று குழந்தைகளுடன் பேசி கைகுலுக்கி குழந்தைகளை மகிச்சியடையச் செய்தார். பின்னர், குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். திட்டமிடாமல் திடீரென குடியரசுத் தலைவர் காரை நிறுத்தி இறங்கிய சம்பவத்தால் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீஸார் அதிர்ந்தனர். பின்னர், தனது மதுரைப் பயணத்தை முடித்துக்கொண்டு கோவை சென்றடைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x