Published : 18 Feb 2023 07:04 PM
Last Updated : 18 Feb 2023 07:04 PM

முதல் முறையாக தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை: சென்னைப் பேருந்து நிலையங்கள் எவ்வாறு மேம்படுத்தப்படும்?

தி.நகர் பேருந்து நிறுத்தம்

சென்னை: சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பாக முதல் முறையாக தலைமைச் செயலர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமாக பிராட்வே, திருவான்மியூர், அடையாறு, திருமங்கலம், வடபழனி, கிண்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பேருந்து நிலையங்கள் உள்ளன. இந்தப் பேருந்து நிலையங்களை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தினர் பராமரித்து வருகின்றனர். அதேநேரம், பயணியருக்கு போதிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை தொடர்கிறது. குறிப்பாக, அமரும் இடம், கழிப்பறை, குடிநீர் வசதி, சுகாதாரமான இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், மழைக் காலங்களில் பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்குவது தொடர் கதையாகி வருகிறது.

சென்னை மாநகராட்சி சார்பில், சாலைகள், தெருக்களில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு அமைக்கப்பட்டிருந்தாலும், மாநகர போக்குவரத்து கழக பகுதியில், அப்பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதற்கு, அரசு துறைகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில், சென்னை மாநகராட்சி, மாநகர போக்குவரத்து கழகம், சென்னை பெருநகர வளர்ச்சி குழும்ம் ஆகிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன், தலைமை செயலர் இறையன்பு நேற்று (பிப்.17) ஆலோசனை நடத்தினார்.

அப்போது, சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களை மேம்படுத்துவது, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை துாய்மையாக பராமரிப்பது மற்றும் கழிப்பறைகளை சுகாதாரமாக பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறும்போது, "சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள் மேம்படுத்துவது தொடர்பாக முதன்முறையாக தலைமைச் செயலர் தலைமையில், சம்பந்தப்பட்ட துறைகள் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்கள், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் உள்ள பேருந்து நிலையங்களில் மழைக் காலங்களில் நீர் தேங்காமல் தடுக்க ஆலோசிக்கப்பட்டது.

இதற்காக, தலைமைச் செயலர் தலைமையில், சென்னை மாநகராட்சி, மாநகர போக்குவரத்து கழகம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் உயர் அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. அதன்படி, மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் மழைநீர் வடிகால், பேருந்து நிலையங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக பேருந்து நிலையங்களில் தரைத்தள வடிவமைப்பிலும் சில மாற்றங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தவிர, கழிப்பறை வசதிகள், அமரும் இடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து ஏற்படுத்தவும் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். இப்பணிகள் விரைந்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x