Published : 18 Feb 2023 05:45 PM
Last Updated : 18 Feb 2023 05:45 PM
சென்னை: காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் நடந்தாலும், ஒவ்வொரு சாதாரண போலீஸ் விசாரணைகளையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி ரமேஷ் என்பவர், கிருஷ்ணமூர்த்தி என்பவர் மூலம் சுமித்தி சலானி என்பவருடன் வியாபார தொடர்பு வைத்திருந்தார். வெள்ளி விளக்குகள் சப்ளை செய்த வகையில் தனக்கு தர வேண்டிய பாக்கித் தொகையை தராததால், சலானிக்கு எதிராக ரமேஷ் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக தன்னை விசாரணைக்கு அழைத்து கட்டப் பஞ்சாயத்து செய்ததுடன், தனது மெர்சிடஸ் பென்ஸ் காரின் ஆவணங்களை வலுக்கட்டாயமாக வாங்கிக் கொண்டதாக உதவி ஆணையர் லட்சுமணனுக்கு எதிராக மாநில மனித உரிமை ஆணையத்தில் ரமேஷ் புகார் மனு தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த மனித உரிமை ஆணையம், உதவி ஆணையருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து லட்சுமணன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி மற்றும் ஹேமலதா அமர்வு, வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆராய்ந்ததில் ரமேஷ், எந்தவித மனித உரிமை மீறலுக்கும் ஆளாக்கப்படவில்லை என்று கூறி, மனித உரிமை ஆணைய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், காவல் நிலையங்களில் மனித உரிமை மீறல்கள் நடந்தாலும், சாதாரணமான ஒவ்வொரு போலீஸ் விசாரணையயும் மனித உரிமை மீறலாக கருத முடியாது. குற்ற வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகளின் வேறுபாடுகள் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. எனவே, சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் காவல்துறையினர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற வழக்குகளை கையாள்வது குறித்து காவல் துறையினருக்கு கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே காவல் துறையினர் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பது, ஒட்டுமொத்த போலீஸாரின் ஊக்க குறைபாடுகளுக்கு காரணமாகிவிடும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT