Published : 18 Feb 2023 04:38 PM
Last Updated : 18 Feb 2023 04:38 PM

தமிழக மீனவர் சுட்டுக் கொலை: கர்நாடக வனத் துறையினர் மீது கொலை வழக்கு பதிய மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன் | கோப்புப் படம்

சென்னை: தமிழக மீனவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கர்நாடக வனத் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேலம் மாவட்டம், கொளத்தூர் தாலுகா, மேட்டூர், கோவிந்தபட்டியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட 7 பேர் கடந்த 14-ந் தேதியன்று காவிரி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற போது, கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழகத்தைச் சார்ந்த ராஜா என்ற காரவடையான் பலியாகியுள்ளார். கர்நாடக வனத்துறையினரின் இந்த ஜனநாயக விரோத, சட்டவிரோத படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக - கர்நாடக எல்லையில் காவிரியுடன் இணையும் பாலாறு வனப்பகுதி உள்ளது. மலையோர தமிழக கிராமங்களிலிருந்து செல்லும் மீனவர்கள் பாலாற்றை கடந்து சென்று இப்பகுதியில் மீன்பிடிப்பது வழக்கம். அந்த வகையில் சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தபாடி, தருமபுரி மாவட்டம் ஏமனூரைச் சேர்ந்தவர்கள் இரண்டு பரிசல்களில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர்.

உயிருக்கு பயந்து அனைவரும் தப்பியோடிய நிலையில் ராஜா என்ற காரவடையான் என்பவர் மீது குண்டு பாய்ந்து ஆற்று நீரில் மூழ்கி பலியாகியுள்ளார். இதேபோன்று, 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களை கார்நாடக வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியில் பழனி என்பவர் பலியாகியுள்ளார். கர்நாடக வனத்துறையினர் படுகொலைகள் தொடர்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

எனவே, துப்பாக்கிச் சூடு நடத்திய கர்நாடக வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்திட வேண்டுமெனவும், அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலைகள் புரியும் கர்நாடக வனத்துறையினரின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திடவும், உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கிடுவதற்கும் கர்நாடக அரசை தமிழக அரசு உரிய முறையில் நிர்ப்பந்திக்க வேண்டுமென சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும், உயிரிழந்த குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் பலியான ராஜாவை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு இது ஆறுதல் அளிப்பதாக இருப்பினும், கூடுதலாக இழப்பீடும், அவரது குடும்பத்திற்கு அரசு வேலையும் வழங்கிட முதல்வர் முன்வர வேண்டுமெனவும் சிபிஐ (எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x