Published : 18 Feb 2023 11:13 AM
Last Updated : 18 Feb 2023 11:13 AM

ஈரோட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் மீது தாக்குதல்: சீமான் கண்டனம் 

சீமான் | கோப்புப் படம்

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் நடைபெற்ற மீது தாக்குதல் சம்பவத்திற்கு அக்கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களத்தில் மக்களைச் சந்தித்து அமைதி வழியில் பரப்புரை செய்து கொண்டிருந்த நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்கள் மீதும், தம்பிகள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள திமுக ரவுடிகளின் வெறிச்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தோல்வி பயத்தில், அதிகாரத்திமிரில் திமுக மேற்கொள்ளும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களால் நாம் தமிழர் கட்சியை ஒருபோதும் முடக்கிவிட முடியாது.

நாம் தமிழர் கட்சியின் மாநில தொழிற்சங்கத் தலைவரும், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த்தேசிய அரசியலை தன் உயிர் மூச்சாகக் கொண்டு களமாடுபவரும், கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து என் தோளுக்குத் துணையாக நிற்பவருமான அன்புத்தென்னரசன் மீது இரும்புக் கம்பியினைக் கொண்டு தாக்கி கொலை செய்ய முயன்ற திமுக ரௌடிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்யத் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்.

ஆளும் கட்சியினரின் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களை தேர்தல் ஆணையம் இனியும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது சனநாயகத்தின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதமுள்ள நம்பிக்கையை முற்றுமுழுதாக தகர்ப்பதாகவே அமையும்.

இன்னும் வைக்காத பேனா சிலையை உடைப்பேன் என்று சொன்னதற்காக கோவப்பட்ட சனநாயகவாதிகள், திமுக ஆதரவாளர்கள் உயிருள்ள மனிதரின் மீது நடத்தியுள்ள இக்கொலைவெறித் தாக்குதலை கண்டிக்க வாய் திறப்பார்களா? கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று கூறிக்கொண்டு வன்முறையை கட்டவிழ்த்து விடுவதற்கு பெயர்தான் திமுகவின் திராவிட மாடலா? இனி இதுதான் திமுகவின் அரசியல்பாதை என்றால் அதை எதிர்கொள்ளவும் நாம் தமிழர் கட்சி ஆயத்தமாகவே உள்ளது.

ஆட்சி - அதிகார பலம், அதன் மூலம் கொள்ளையடித்த பணபலம், அதனைக் கொடுத்து திரட்டிய ரௌடிகள் பலம் ஆகியவற்றை மூலதனமாக கொண்டு, முறைகேடாக தேர்தலில் வெல்ல சனநாயகத்தைப் படுகொலை செய்யும் திமுகவின் வன்முறை வெறியாட்டங்களுக்கு, மாற்றத்தை விரும்பி நிற்கும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்." இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x