Published : 25 May 2017 10:04 AM
Last Updated : 25 May 2017 10:04 AM
கிராமப்புற விவசாயத்துக்கு உதவும் வகையில் தமிழகம் முழுவதும் நீர் சேமிப்பு பிரச்சாரத்தை ‘நபார்டு’ வங்கி தொடங்கவுள்ளது. இதற்காக தண்ணீர் தூதுவர்களை நியமித்து கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.நாகூர் அலி ஜின்னா ‘தி இந்து’விடம் கூறியதாவது:
நபார்டு வங்கி தேசிய அளவில் தண்ணீர் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. வங்கிகள், என்ஜிஓ-க்கள், விவசாய பல்கலைக்கழகங்கள், மாநில அரசின் துறைகள், விவசாய சங்கங்கள், சுயஉதவிக் குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. நீரைச் சேமிப்பது, பாதுகாப்பது, திறமையாக கையாளுவது, நிலத்தடி நீரை மறுசுழற்சி செய்வது, மழைநீரைச் சேகரிப்பது, கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நுண் பாசனத்தை ஊக்குவித்தல், பண்ணைக் குளங்கள், அணைகள், அகழிகள் ஆகியவற்றில் தண்ணீரைச் சேமித்து அவற்றை விவசாயத்துக்கு பயன்படுத்துவது ஆகியவை இதன் முக்கிய நோக்கமாகும். இதுகுறித்து, விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த வாரம் இப்பிரச்சார திட்டம் தொடங்கப்படுகிறது. இதற்காக, அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், சேலம், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள 6 ஆயிரத்து 500 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தூதுவர்கள் என பெயரிடப்பட்டுள்ள இவர்கள் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்துப் பேசி தண்ணீரை எவ்வாறு சேமித்து, பாதுகாத்து, திறமையாக மேலாண்மை செய்து பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மேலும், துண்டு பிரசுரங்கள், ஒளி, ஒலி காட்சிகள், குறும்படங்கள், தெரு நாடகங்கள் மூலமும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் மூலம், தண்ணீர் சேமிப்புக் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படும். பாசன பகுதிகள் அதிகரிக்கும். அதன் மூலம் விவசாய உற்பத்தி அதிகரிக்கும். நீர் ஆதாரங்களை உருவாக்குவதில் தனியார் நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கும். வனப்பகுதி அதிகரிக்கும். விவசாயிகள் இடம்பெயர்தல் தடுக்கப்படும். அவர்களுடைய வருமானம் அதிகரிப்பதோடு, அவர்களுடைய வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு நாகூர் அலி ஜின்னா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT