Published : 25 May 2017 10:06 AM
Last Updated : 25 May 2017 10:06 AM
மணல் குவாரி பிரச்சினையால் ரயில் பாதை அமைப்பதற்கு தேவையான மண், கிராவல் மண் கிடைக்காமல் காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையேயான அகல ரயில் பாதை பணி 6 மாதங்களாக முடங்கியுள்ளது.
காரைக்குடி -பட்டுக்கோட்டை - திருத்துறைப்பூண்டி- திருவாரூர் இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.1,200 கோடியில் இதுவரை ரூ.700 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியான காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே 73 கிலோமீட்டர் தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணியை இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு இருந்தது. இதுவரை 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், வாளரமாணிக்கம் -அறந்தாங்கி இடையே உள்ள 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன.
மணல் பிரச்சினை தொடர்பாக சேகர் ரெட்டி கைது செய்யப்பட்ட பிறகு தமிழகத்தில் மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்கு தேவைப்படும் மண், கிராவல் மண் கிடைக்கவில்லை. இதனால் அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இதுதொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில் பாதை அமைக்கும்போது அடித்தளமாக சுமார் 6 அடி உயரத்துக்கு மண் மற்றும் கிராவல் மண் கொட்ட வேண்டும்.
பின்னர் அதன் மீது ஜல்லி கொட்டி, ஸிலீப்பர்கள் கட்டைகளைப் போட்டு, ரயில் தண்டவாளம் அமைக்கப்படும். ரயில் தண்டவாளம் அமைக்க எல்லா மண்ணையும் பயன்படுத்த முடியாது. அதற்கு உரிய மண் கிடைத்தால்தான் வலுவான அடித்தளம் அமைத்து ரயில் தண்டவாளம் அமைக்க முடியும். பட்டுக்கோட்டை - காரைக்குடி இடையேயான 73 கிலோமீட்டர் ரயில் பாதையில் 10 கிலோ மீட்டர் தூரம் மட்டும்தான் அகல ரயில் பாதை அமைக்க வேண்டியுள்ளது. அதற்கு தேவையான மண் கிடைக்காததால் இப்பணி கடந்த 6 மாதங்களாக நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது. இப்பணியை இந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடித்திருக்க வேண்டும்.
இப்பணியை ஏன் இன்னும் முடிக்கவில்லை? என்று ரயில்வே போர்டில் இருந்து கேள்விக்கு மேல் கேள்வி கேட்பதுடன், எங்களுக்கு தொடர்ந்து அழுத்தமும் கொடுத்து வருகிறார்கள். அதனால், ரயில் பாதை அமைப்பதற்கு தேவையான மண் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. அரசு நடத்தும் மணல் குவாரிகளில் இருந்து மண், கிராவல் மண் கிடைக்காததால், அறந்தாங்கி பகுதியில் ரயில் பாதை அமைப்பதற்கு ஏற்ற மண் இருப்பதை கண்டறிந்து அங்கு மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி 6 மாதங்கள் கடந்துவிட்டன.
இதுவரை எந்தப் பலனும் இல்லை. மண் வழங்கும்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை 2 முறை நேரில் சந்தித்து முறையிட்டோம். இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தொழில்துறை செயலாளருக்கு பல முறை கடிதம் எழுதினோம்.
10 கி.மீ. ரயில் பாதை பணிகள் முடியாததால், 73 கி.மீ. தூரத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்க முடியாத நிலை உள்ளது. இப்போது மண் கொடுத்தால்கூட அடுத்த 3 மாதங்களில் காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே 73 கிலோமீட்டர் தூரத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்க முடியும். இதைக் கருத்தில்கொண்டு போதிய மண் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT