Published : 17 Feb 2023 08:30 PM
Last Updated : 17 Feb 2023 08:30 PM
கோவை: இருவேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை (பிப்.18) கோவை வருகிறார். அவரது வருகையையொட்டி, மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இதன் வளாகத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவன் சிலை உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு மகா சிவராத்திரி விழா கொண்டாட்ட நிகழ்வுகள் நாளை (பிப்.18) நடக்கின்றன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். அதேபோல், நாளை மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலும் குடியரசு தலைவர் சுவாமி தரிசனம் செய்கிறார்.
இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை காலை 8.55 மணிக்கு டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு 11.40 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து 12.05 மணிக்கு மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், மதியம் 2 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் குடியரசு தலைவர் மதியம் 3.10 மணிக்கு கோவை விமான நிலையத்துக்கு வருகிறார்.
அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர், காவல் ஆணையர், மேற்கு மண்டல ஐஜி, மாநகராட்சி ஆணையர், மேயர் உள்ளிட்டோரும், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து சிறிது நேரம் குடியரசு தலைவர் ஓய்வெடுக்கிறார். பின்னர், மாலை 5 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு புறப்படுகிறார். 5.45 மணிக்கு ஈஷா வளாகத்துக்கு வந்தடையும் குடியரசு தலைவர், அங்குள்ள சூர்ய குண்டம், தியானலிங்கம், யோகலிங்க ஆலயம் உள்ளிட்டவற்றுக்கு சென்று தரிசனம் செய்கிறார்.
பின்னர், 6.35 மணிக்கு ஆதியோகி சிவன் சிலை வளாகத்துக்கு வரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். விழாவுக்கு பின்னர், இரவு 8.30 மணிக்கு ஈஷா வளாகத்தில் இருந்து கார் மூலம் புறப்படும் குடியரசு தலைவர் இரவு 9.15 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தடைகிறார். பின்னர், நாளை இரவு இங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.
அதையடுத்து நாளை மறுநாள் (பிப்.19-ம் தேதி) காலை 9.15 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் ஹெலிகாப்டர் தளத்துக்கு குடியரசு தலைவர் செல்கிறார். காலை 10.10 மணிக்கு முப்படைக் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு நண்பகல் 11.50 மணிக்கு வெலிங்கடனில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படும் குடியரசு தலைவர் 12.15 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். மதியம் 12.25 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து தனி விமானத்தில் குடியரசு தலைவர் புறப்பட்டு மதியம் 3.25 மணிக்கு டெல்லிக்கு சென்றடைகிறார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் : குடியரசு தலைவர் வருகையையொட்டி கோவை, நீலகிரியில் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், கூடுதல் டிஜிபி சங்கர், மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகர் ஆகியோர் தலைமையில் 5 அடுக்கு போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் போலீஸார் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
விழா நடக்கும் இடம் முழுவதையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய பாதுகாப்புப் படை உயரதிகாரிகளும் விழா நடக்கும் இடங்களை ஆய்வு செய்தனர். தவிர, மாவட்டம் மற்றும் மாநகரப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தலைவரை அழைத்து வருவது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சியையும் போலீஸார் நடத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT