Published : 17 Feb 2023 04:53 PM
Last Updated : 17 Feb 2023 04:53 PM
சென்னை: கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழக மீனவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே அடிப்பாலாறு பகுதியில் கடந்த 14-ஆம் தேதி இரவு தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றபோது அவர்கள் மீது கர்நாடக வனத் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ராஜா என்ற மீனவர் உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
மீனவர் ராஜாவும், அவரது நண்பர்களும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மான் வேட்டையாடியதால் வானத்தை நோக்கி சுட்டதாக வனத்துறையினர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை மீனவர்கள் தவறு செய்திருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமே தவிர, துப்பாக்கி சூடு நடத்தியது சட்டத்தை மீறிய செயலாகும். எந்த வகையிலும் அதனை நியாயப்படுத்த முடியாது.
இந்த துயரச் சம்பவம் நடந்து 3 நாட்களுக்குப் பின்னரும் இது குறித்து கர்நாடக வனத்துறைக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்காதது மீனவர் சமூகத்தினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜா உயிரிழக்கக் காரணமான கர்நாடக மாநில வனத்துறைக்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன், உயிரிழந்த மீனவருக்கு இருமாநில அரசுகளும் நிதி உதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றேன்'' என்று டிடிவி தினரகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT