Published : 17 Feb 2023 04:17 PM
Last Updated : 17 Feb 2023 04:17 PM

பாலிடெக்னிக் நில விவகாரம்: பட்டுக்கோட்டை நகராட்சி தீர்மானத்தை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலிடெக்னிக் அமைக்க ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்பப்பெறும் வகையில், பட்டுக்கோட்டை நகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மற்றும் சாத்தான்காடு பகுதிகளில் குடிநீர் வசதி ஏற்படுத்துவதற்காக 1964-ல், 37.93 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது. இந்நிலையில், 1982ஆம் ஆண்டு பாலிடெக்னிக் அமைக்க, அதே பகுதியில் 20 ஏக்கர் நிலத்தை ஒதுக்கித் தரக் கோரி பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் சங்கம் அரசிடம் விண்ணப்பித்தது.

இதனை பரிசீலித்த அரசு, குடிநீர் திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலத்தில் 20 ஏக்கரை சங்கத்திற்கு ஒதுக்கி 1983-ஆம் ஆண்டு பட்டுக்கோட்டை நகராட்சி உத்தரவிட்டது. இதில் பாலிடெக்னிக், உணவு விடுதி ஆகியவை கட்டப்பட்ட நிலையில், அந்த நிலத்திற்கு ஒரு கோடியே ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 58 ரூபாய் விலை நிர்ணயம் செய்த அரசு, அந்த விலையை வசூலித்துக் கொண்டு, சங்கத்திற்கு நிலத்தை கிரையம் செய்து கொடுக்கும்படி பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உத்தரவிட்டது.

ஆனால், அந்தத் தொகையை வாங்க மறுத்த நகராட்சி, பத்திரப்பதிவும் செய்து கொடுக்காததால் 2013-ஆம் ஆண்டு சங்கத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், நகராட்சியை விரிவுபடுத்தி வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதாக கூறி, பாலிடெக்னிக்குக்கு ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தை திரும்பப்பெறுவது தொடர்பாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எவ்வித இடையூறும் இல்லாமல் 30 ஆண்டுகளாக முழு அளவில் பாலிடெக்னிக் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, நகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு நிர்ணயித்த தொகையை பெற்றுக்கொண்டு நிலத்தை பத்திரப்பதிவு செய்து தர உத்தரவிட வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்றத்தில் பாலிடெக்னிக் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 8 ஏக்கரை பாலிடெக்னிக் சங்கம் வைத்துக்கொண்டு, மீதமுள்ள 12 ஏக்கரை நகராட்சியிடம் ஒப்படைக்கும்படி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து சங்கத்தின் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 1983-லிருந்து 2013-ம் ஆண்டு வரை அந்த நிலத்தை எந்த திட்டத்திற்காகவும் பயன்படுத்தவில்லை. இந்நிலையில் தனி நீதிபதி முன்பு வழக்கு தொடரப்பட்ட பிறகு, நிலத்தை திரும்பப்பெறுவது என தீர்மானம் நிறைவேற்றியதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.

ஒதுக்கப்பட்ட 20 ஏக்கர் நிலத்தையும் பாலிடெக்னிக் பயன்படுத்தி வருகிறது. அதன்மூலம் பல கிராமப்புற மாணவர்கள் பயனடைந்துள்ளனர். எந்தவித உறுதியான திட்டமும் இல்லாத நிலையில் நிலத்தை திரும்பப்பெற நகராட்சிக்கு உரிமை இல்லை என க்கூறி தீர்மானத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் 2009-ம் ஆண்டு அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாயை, இதுவரையிலான காலகட்டத்திற்கு ஆண்டிற்கு 9 சதவீத வட்டியுடன் செலுத்தும்படி பாலிடெக்னிக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டனர். அந்த தொகையை பெற்றுக்கொண்டவுடன் பட்டுக்கோட்டை நகராட்சி, நிலத்தை கிரயம் செய்துகொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x