Published : 17 Feb 2023 04:25 AM
Last Updated : 17 Feb 2023 04:25 AM

வாகன நிறுத்தங்களை அகற்றுவதால் அதிகரிக்கும் நெரிசல்: கண்டுகொள்ளாத மதுரை மாநகராட்சி அதிகாரிகள்

மதுரை: மதுரையில் உள்ள அரசுக் கட்டிடங்களில் பார்க்கிங் வசதியை நீக்குவதாலும், புதிய கட்டிடங்களில் அந்த வசதியே இல்லாமல் இருப்பதாலும் தனியார் நிறுவனங்கள் ‘பார்க்கிங்’ வசதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் மென்மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது. கோயில் நகரமான மதுரையில் அகலமான சாலைகள், கழிப்பறை வசதிகள் இல்லை. குறிப்பாக வாகனங்களை நிறுத்த `பார்க்கிங்' வசதி இல்லை. பிரம்மாண்ட கடைகள் முதல் சாதாரண கடைகள் வரை எந்த ஒரு கடைக்கும் பார்க்கிங் வசதியில்லை.

திருமண மண்டபங்கள், ஹோட்டல்களிலும் பார்க்கிங் வசதியில்லை. மதுரையைவிட சிறிய மாநகராட்சி, நகராட்சிகளில்கூட மல்டி லெவல் பார்க்கிங் வசதிகள் உள்ளன. அதற்காக சிறப்பு மாஸ்டர் பிளான் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மதுரையில் மாநகராட்சி உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் ஏற்கெனவே இருந்த பார்க்கிங்குகளை மூடிவிட்டு கட்டிடங்களைக் கட்டிவருகின்றன.

அரசு மருத்துவமனையில் பார்க் கிங் வசதி என்ற பேச்சுக்கே இடமில்லை. மருத்துவமனைக்கு வருவோர் சாலையில்தான் வாகனங்களை நிறுத்து கின்றனர். தற்போதுகூட கோரிப்பாளை யத்தில் ரூ.350 கோடிக்கு பார்க்கிங் வசதியே இன்றி ஒருங்கிணைந்த மருத்துவக் கட்டிடம் கட்டப்படுகிறது.

மாட்டுத் தாவணி காய்கறி மார்க்கெட்டில் பார்க்கிங் வசதி இல்லை. தமுக்கம் மைதானம் அருகே பார்க்கிங் ஆக செயல்பட்ட இடத்தில் தற்போது நூலகக் கட்டிடம் கட்டப்படுகிறது. ஜான்சிராணி பூங்காவில் இருந்த பார்க்கிங் வசதி மூடப்பட்டுள்ளது. மீனாட்சிம்மன் கோயில் செல்வோர் இந்த பார்க்கிங்கில் வாகனங்களை எளிதாக நிறுத்தினர். தற்போது அங்கு சாலையில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

பெரியார் பேருந்து நிலையத்தில் பார்க்கிங் வசதி இருந்தும் அது இன்னும் திறக்கப்படவே இல்லை. புதிதாகவும் பார்க்கிங் வசதி செய்வதில்லை. அரசுத் துறைகளே இப்படி இருக்கின்ற பார்க்கிங் வசதியை மூடுவதால் தனியார் நிறுவனங்கள் பார்க்கிங்குக்காக ஒதுக்கிய இடங்களை பிற தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர்.

அப்படியே இருந்தாலும் குறைவான கார்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதிதான் உள்ளன. நகரில் சில திரையரங்குகளில்கூட போதுமான வாகன நிறுத்தும் வசதி இல்லை. அதனால், அந்த திரையரங்குக்கு படம் பார்க்க வருவோர் சாலைகளில் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர்.

அதனால் சாலைகளில் நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீஸார்தான் தினமும் சிரமத்துடன் பணியாற்றி ஒழுங்குபடுத்துகின்றனர். பார்க்கிங்குக்காக ஒதுக்கிய இடங்கள் அதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறதா? என்பதை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. பார்க்கிங் வசதி இல்லாத நிறுவனங்களுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த அறிவுறுத்துவதும் இல்லை.

அதனால், முக்கியப் பண்டிகை, திருவிழாக் காலங்களில் சுற்றுலா வருவோர் மீண்டும் மதுரைக்கு வரவே யோசிக்கின்றனர். தனியாருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு இப்படி பார்க்கிங் வசதிகளை மூடுவது நியாயமா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். வாகனங்களை நிறுத்துவதற்கு நகர் பகுதிகளில் கார் பார்க்கிங் ‘லிப்ட்’, மல்டி லெவல் பார்க்கிங் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், பெரியார் பேருந்து நிலையம், மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் பல்லடுக்கு பார்க்கிங் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமையும் கட்டிடங்களில் பார்க்கிங் வசதி கட்டாயமாக்கப் பட்டுள்ளது. நகரில் பார்க்கிங் வசதியை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயாராகி வருகிறது, என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x