Published : 17 Feb 2023 12:44 PM
Last Updated : 17 Feb 2023 12:44 PM
சேலம்: ‘கள ஆய்வில் முதல்வர்’திட்டத்துக்காக முதல்வர் ஸ்டாலின் சேலம் வந்த நிலையில், சாலையில் போக்குவரத்து இடையூறின்றி பயணம் செய்ய காவல் துறை அனுமதியளித்ததால், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
சேலம் மண்டல அளவில் ‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். கடந்த 15, 16 என இரண்டு தினங்களாக முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் முகாமிட்டு கள ஆய்வு பணியில் ஈடுபட்டார். புதன்கிழமை காலை 10.45 மணிக்கு சேலம் வந்த முதல்வர் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம், சேலம் பழைய பேருந்து நிலையம், ஆட்சியர் அலுவலகம், ஏற்காடு அடிவாரம் மற்றும் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தங்கி, வியாழன் மாலை ஐந்து ரோடு வழியாக சேலம் காமலாபுரம் விமான நிலையம் சென்று, தனி விமானம் மூலம் சென்னை சென்றடைந்தார்.
சேலத்தில் கடந்த இரண்டு நாட்கள் முதல்வர் ஸ்டாலின் இருந்த நிலையில், பொதுமக்களுக்கான போக்குரவத்து சீர்பாட்டுடன் இருந்தது. முதல்வர் ஸ்டாலின் வரும் ‘கான்வாய்’ சாலையில், சில நிமிடங்கள் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்பட்டு, உடனடியாக பொதுமக்கள் வாகனங்களில் செல்ல போலீஸார் அனுமதித்தனர். இதனால், முதல்வர் ஸ்டாலின் வரும் பாதைகளில் நீண்ட நேரம் பொதுமக்கள் வாகனங்களில் காத்திருக்க தேவையில்லாத சூழல் இருந்தது.
முதல்வரின் வருகையால் போக்குவரத்து இடையூறில்லாத நிலையால், பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.
மேலும், முதல்வர் ஸ்டாலின் அரசு நிர்வாக செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு பணியில் ஈடுபட வேண்டி, அரசு முறை பயணமாக சேலம் வந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு முதல் நாள் கட்சியினர் வழக்கம் போல, நான்கு ரோடு, பெரியார் மேம்பாலங்களில் திமுக கொடிகளை நெடுகிலும் கட்டினர். கட்-அவுட், பேனர், போஸ்டர் ஒட்டவும் கட்சி பிரமுகர்கள் தயாராகினர்.
முதல்வர் அரசு முறை பயணமாக சேலம் வந்துள்ள நிலையில், கட்சியினர் ஆர்ப்பரிப்புடன் வீதி எங்கும் விளம்பரம் செய்வதும், முதலவரை துதி பாடிடும் விதமாக ‘மைக் செட்’ அமைப்பது உள்ளிடவை தவிர்க்க கட்சியினருக்கு அறிவுறத்தப்பட்டது. இதனால், இரண்டு நாட்களும் முதல்வர் ஸ்டாலின் வருகையால் பெருவித ஆர்ப்பரிப்பு இல்லாமல், அமைதி நிலைத்ததை மக்கள் வரவேற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT