Published : 16 Feb 2023 07:16 PM
Last Updated : 16 Feb 2023 07:16 PM
கோவை: தமிழகத்தில் 32 இடங்களில் ஈஷா சார்பில் மகா சிவராத்திரி விழா சனிக்கிழமை (பிப்.18) நடத்தப்பட உள்ளதாக ஈஷா நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் சுமார் 32 இடங்களில் ஈஷா மகா சிவராத்திரி விழா நடப்பாண்டு மிக விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில், பொதுமக்கள் இலவசமாக பங்கேற்கலாம். மேலும், ஆதியோகி ருத்ராக்ஷத்தையும் பிரசாதமாக பெற்று கொள்ளலாம்.
நடப்பாண்டு சனிக்கிழமை (18-ம் தேதி) மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை ஈஷாவில் மகா சிவராத்திரி விழா ஆதியோகி முன்பு நடைபெற உள்ளது.
இதுதவிர, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுச்சேரி, சேலம், நாமக்கல், திருவாரூர், நாகர்கோவில், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கடலூர், திண்டுக்கல் உட்பட 32 இடங்களில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை isha.co/msrtn-ta என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
கோவையில் நடைபெறும் மகா சிவராத்திரி விழா மற்ற எல்லா இடங்களிலும் பெரிய எல்.இ.டி தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். இவ்விழா தியானலிங்கத்தில் நடைபெறும் பஞ்சபூத க்ரியாவுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய நடக்க உள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நாட்டுப் புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப் புற கலைஞர் மாமே கான், இசையமைப்பாளரும், பிரபல சித்தார் இசை கலைஞருமான நிலத்ரி குமார், டோலிவுட் பின்னணி பாடகர் ராம் மிரியாலா உள்ளிட்டோர் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர்.
தவிர, கேரளாவைச் சேர்ந்த ‘தெய்யம்’ நடன குழுவினர், கர்நாடகாவை சேர்ந்த ஜனபாடா நாட்டு புற நடன கலைஞர்கள், ஜார்ஜியாவைச் சேர்ந்த நடன கலைஞர்களின் நிகழ்வுகளும் உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT