Last Updated : 16 Feb, 2023 05:58 PM

 

Published : 16 Feb 2023 05:58 PM
Last Updated : 16 Feb 2023 05:58 PM

பணி  நிரந்தரம் கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு 1 லட்சம் மனுக்கள் அனுப்ப பகுதி நேர ஆசிரியர்கள் முடிவு

பிரதிநிதித்துவப் படம்

கடலூர்: பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் 1 லட்சம் மனுக்களை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ''முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தவாறு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் சார்பில் ஒரு லட்சம் மனு அனுப்ப முடிவு செய்துள்ளோம். திமுக தேர்தல் அறிக்கை குழு, பள்ளிக் கல்வி அமைச்சர், நிதி அமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர், தலைமை செயலாளர், முதல்வரின் செயலாளர், பள்ளிக் கல்வி செயலாளர், பள்ளிக் கல்வி ஆணையர், மாநில திட்ட இயக்குநர் ஆகியோருக்கும் 1 லட்சம் மனுக்கள் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

12 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை முக்கியத்துவம் கொடுத்து அரசு கொள்கை முடிவெடுத்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும், முதல்வர் திமுகவின் தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதி மற்றும் உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சி தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறையில் வாக்குறுதி கொடுத்ததை இனியும் தாமதம் செய்யாமல் உடனே நிறைவேற்ற வேண்டும்.

சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக என ஆறு கட்சிகள் சார்பில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்துள்ளார்கள்.

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார்

அனைத்து கட்சிகள் சார்பில் அறிக்கை மூலமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் சுற்றுப் பயணங்களில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது இதே சட்டசபையில் இதே கோரிக்கை வைத்தது. இப்போது திமுகவிடம் மற்ற கட்சிகள் கோரிக்கை வைக்கிறது.

வாக்குறுதியை நிறைவேற்றும் இடத்தில் இருக்கும்போது இரண்டு ஆண்டுகளாக 12,000 குடும்பங்கள் வாழ்வாதாரம் மேம்பட முதல்வர் ஸ்டாலின் பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும் என்று கோரி 1 லட்சம் மனுக்களை அனுப்ப முடிவு செய்துள்ளோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x