Published : 16 Feb 2023 03:08 PM
Last Updated : 16 Feb 2023 03:08 PM

ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதி பெறாத 14 ‘கூடாரங்களுக்கு’ சீல் - அதிகாரிகள் அதிரடி

ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதி பெறாமல் செயல்பட்ட திமுக தேர்தல் பணிமனை ஒன்றிற்கு தேர்தல் பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதி பெறாமல் திமுக மற்றும் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டு இருந்த 14 தேர்தல் பணிமனைகளுக்கு (கூடாரங்கள்) தேர்தல் பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிமனை என்ற பெயரில் கூடாரங்கள் அமைத்து வாக்காளர்களை, திமுகவினர் அடைத்து வைக்கப்படுவதாக அதிமுக சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இரு கட்சிகளின் சார்பிலும் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனைகளில் (கூடாரங்கள்) போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் முறையாக அனுமதி பெறாத தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இதன்படி, திமுக சார்பில் ஈரோடு கள்ளுக்கடை மேடு, பெரியார் நகர், கல்யாண சுந்தரம் வீதி ஆகிய இடங்களில் தலா ஒரு தேர்தல் பணிமனை மற்றும் கருங்கல் பாளையத்தில் அமைக்கப்பட்டு இருந்த 7 பணிமனைகள் என மொத்தம் 10 தேர்தல் பணிமனைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

அதேபோல், அதிமுக சார்பில் ஈரோடு கருங்கல்பாளையம், கல்யாண சுந்தரம் வீதி, அந்தோனியார் வீதி, மணல்மேடு உள்ளிட்ட நான்கு இடங்களில் செயல்பட்ட அனுமதி பெறாத தேர்தல் பணிமனைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் இரு கட்சிகளின் நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, “வாக்காளர்களை ஆங்காங்கே சாமியானா பந்தல் போட்டு அடைத்துவைத்து, காலையில் 500 ரூபாய், பின்னர் அவர்களது வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள், ஆட்டிறைச்சி, மீன், சிக்கன் உள்ளிட்டவை வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல், மாலையில் 500 ரூபாய் வழங்கப்படுகிறது” என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியிருந்தார். அதன் விவரம்: “ஈரோடு கிழக்கு வாக்காளர்களைக் கவர ஜனநாயக அத்துமீறலில் திமுக” - புகார்களை அடுக்கும் ஜெயக்குமார்

முன்னதாக, தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேட்டபோது, “முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று விடுவார் என தெரிந்து, தோல்விக்கான காரணங்களை இப்போதே அதிமுகவினர் பட்டியலிடுகின்றனர்.

அனைத்து கூடாரங்களும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவினரைச் சந்திக்க வாக்காளர்கள் விரும்பவில்லை. அதனால், எங்களோடு அவர்கள் இருக்கிறார்கள். எங்களை அடைத்து வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர்கள் யாரேனும் புகார் அளித்துள்ளார்களா?” என்று விளக்கம் அளித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x