Published : 16 Feb 2023 03:17 PM
Last Updated : 16 Feb 2023 03:17 PM
சென்னை: விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு தமிழகத்தின் தென்காசி, ஆனைமலை, பொள்ளாச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாக கேரளாவிலிருந்து லாரிகளில் எடுத்து வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. இச்சம்பவங்கள் தொடர்பாக பல்வேறு நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் தமிழகம், கேரளா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களையும், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள், கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், வயநாடு, ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்களையும் ஒரு தரப்பாகச் சேர்த்து அனைவரையும் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், கடந்த 14-ம் தேதி தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், பசுமைத் தீர்ப்பாயத்தில் ஒரு விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். அதில் “தமிழகத்தில் சட்ட விரோதமாக மருத்துவக் கழிவுகளைத் தொடர்ச்சியாகக் கொட்டுவதால் ஏற்படும் அச்சுறுத்தல் மிகவும் ஆபத்தானது என்றும் கடுமையான சுகாதார அபாய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது என அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம் 1982-ஐ பொதுமக்கள் நலன் கருதி அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்யப்பட்டு மருத்துவக் கழிவுகளை எல்லையோர மாவட்டங்களில் சட்ட விரோதமாகக் கொட்டுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி விரிவுபடுத்தலாம் என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். தலைமை வழக்கறிஞரின் இக்கருத்து தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்று அதில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT