Published : 16 Feb 2023 02:54 PM
Last Updated : 16 Feb 2023 02:54 PM
சென்னை: "திமுக கூட்டணி சார்பில் என்ன கொடுத்தாலும் சரி, வாக்காளர்களைப் பொறுத்தவரை ஒரே மனநிலைதான். இந்த ஆட்சி மீது கடுமையான அதிருப்தி இருக்கின்ற நிலையில், ஒட்டுமொத்தமாக இரட்டை இலைக்கு வாக்கை செலுத்தி இந்த ஆட்சிக்கு சவுக்கடி கொடுக்கின்ற நிலைதான் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கிறது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் சென்னையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை வியாழக்கிழமை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஈரோட்டில் திமுக கூட்டணி சார்பில் ஒட்டகத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது தவறானது. விலங்கின பாதுகாப்பு சட்டத்தின்படி அது தவறு. எனவே, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரத்திற்கு வரக் கூடாது என்பதற்காக, பொதுமக்களை குறிப்பாக வாக்காளர்களை ஆங்காங்கே சாமியானா பந்தல் போட்டு அடைத்துவைத்து, காலையில் 500 ரூபாய், பின்னர் அவர்களது வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள், ஆட்டிறைச்சி, மீன், சிக்கன் உள்ளிட்டவை வீடுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. அதேபோல், மாலையில் 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
இவ்வாறு வாக்காளர்களைக் கவர வேண்டும் என்பதற்காக இப்படி ஜனநாயக அத்துமீறல் நடந்துகொண்டிருக்கிறது. திமுக கூட்டணி சார்பில் என்ன கொடுத்தாலும் சரி, வாக்காளர்களைப் பொறுத்தவரை ஒரே மனநிலைதான். இந்த ஆட்சி மீது கடுமையான அதிருப்தி இருக்கின்ற நிலையில், ஒட்டுமொத்தமாக இரட்டை இலைக்கு வாக்கை செலுத்தி இந்த ஆட்சிக்கு சவுக்கடி கொடுக்கின்ற நிலைதான் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கிறது.
ஈரோடு கிழக்கில் வாக்காளர்களை சுதந்திரமாக இருக்கவிடாமல், சாமியானா பந்தலில் அடைத்து வைத்து அவர்களுக்கு பண ஆசையைக் காட்டுவது என்பது, திருமங்கலம் ஃபார்முலாவைவிட இது புதுமாதிரியான ஃபார்முலா என்றுதான் சொல்ல வேண்டும். இப்படி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில்தான் உள்ளது.
தமிழக முதல்வர் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்வது என்பது, அங்குள்ள காவல் துறையினரை அழைத்து அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பணம் கொண்டு செல்லுபவர்களைத் தடுக்கக்கூடாது என்று அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அதிமுக சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் காரணமாக, இந்திய தேர்தல் ஆணையம் தற்போது விளக்கம் கேட்டுள்ளது. எனவே, 40,000 போலி வாக்காளர்களை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT